×

குந்தா சுற்று வட்டார பகுதியில் வறட்சியால் காய்ந்த தேயிலை செடி; வரத்து குறைவால் உற்பத்தி பாதிப்பு

மஞ்சூர் : குந்தா பகுதியில் வறட்சியால் தேயிலை தோட்டங்களில் செடிகள் காய்ந்து பசுந்தேயிலை வரத்து குறைந்து போயுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலான தேயிலை விவசாயம் உள்ளது. இதை முன்னிட்டு குந்தா, ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய பகுதிகளில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளது. இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு,குறு விவசாயிகள் தேயிலை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கூட்டுறவு தொழிற்சாலைகளில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கத்தினர்களாக இருந்து தங்களது தோட்டங்களில் இருந்து பறிக்கப்படும் பசுந்தேயிலையை தொழிற்சாலை களுக்கு விநியோகித்து வருகிறார்கள்.

குறிப்பாக மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் மட்டுமே முக்கியத் தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், நஞ்சநாடு, மேற்குநாடு உள்ளிட்ட 9 கூட்டுறவு ஆலைகளும் சுமார் 15கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் பனி விழத்துவங்கிய நிலையில் டிசம்பர் மற்றும் ஜனவரியில் உறைபனியும் கொட்டியது. மேலும் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் குந்தா பகுதியை சுற்றிலும் பல பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகி போயுள்ளது. பெரும்பாலான தேயிலை தோட்டங்களிலும் செடிகள் காய்ந்து இலைகள் இல்லாமல் காம்புகள் அனைத்தும் குச்சிகளாக மாறி போயுள்ளது. இதன் காரணமாக மகசூல் குறைந்து பசுந்தேயிலை வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் நாளொன்றுக்கு வெறும் 10ஆயிரம் முதல் 12ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து உள்ளதாக தொழிற்சாலைகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பசுந்தேயிலை வரத்து குறைந்ததால் தேயிலைதுாள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யாத பட்சத்தில் வறட்சி நீடிக்குமானால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயமும் உள்ளது.

இதற்கிடையில் தோட்ட முதலாளிகள், வசதி படைத்தவர்கள் தங்களது தோட்டங்களில் ஸ்பிரிங்களர் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் நீர் பாய்ச்சி தேயிலை வறட்சியின் பிடியில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

The post குந்தா சுற்று வட்டார பகுதியில் வறட்சியால் காய்ந்த தேயிலை செடி; வரத்து குறைவால் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kunta district ,Kunda ,Nilgiris district ,Ooty ,Kunnar ,Kudalur ,Kunda district ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்