×

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு மூட்டு வலிக்கு மருந்தாக செருப்பு செய்து அணிவித்த பக்தர்கள்.! குவியும் வரவேற்பு

நெல்லை: நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு வயது முதிர்வினால் ஏற்பட்ட மூட்டு வலிக்கு மருந்தாக, செருப்பு செய்து அணிவித்த பக்தர்களின் செயல் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருநெல்வேலி டவுண் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் யானையின் பெயர் காந்திமதி. இந்த யானை 13 வயதில் கோவிலுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது யானைக்கு 52 வயதாகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு யானையைச் சோதனை செய்த மருத்துவ குழுவினர் வயதுக்கு ஏற்ற எடையைத் தாண்டி கூடுதலாக 300 கிலோ உள்ளது. எனவே, யானையின் எடையைக் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாள்தோறும் யானையை வாக்கிங் அழைத்துச் செல்வது, அதிக இனிப்பு உள்ள கரும்புகளைக் குறைவாகக் கொடுப்பது, நார்ச்சத்து மிகுந்த உணவு அதிகம் கொடுப்பது எனத் தொடர் உணவுக் கட்டுப்பாடு மற்றும் பயிற்சிகளால் யானை 6 மாதத்தில் 150 கிலோ எடை குறைந்தது. இந்நிலையில், சரியான எடையை அடைந்திருந்தாலும், வயது முதிர்வின் காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், யானை நீண்ட நேரம் நடப்பதற்கும், நிற்பதற்கும் சிரமப்படுவதாகவும், யானை காந்திமதிக்கு நடக்கும்போது கால் வலி ஏற்படாமல் இருக்கவும், மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும் மருத்துவ குணம் வாய்ந்த செருப்புகளை, ரூபாய் 12,000 மதிப்பில் செய்த பக்தர்கள் அதனை யானைக்கு அணிவித்துள்ளனர். தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் யானைக்குத்தான் முதல் முதலாகச் செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

The post நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு மூட்டு வலிக்கு மருந்தாக செருப்பு செய்து அணிவித்த பக்தர்கள்.! குவியும் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Nellaiappar temple ,Gandhimati ,Nellai ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு