- AGS
- வெங்கட் பிரபு
- பிரசாந்த்
- பிரபுதேவா
- அஜ்மல்
- மோகன்
- சினேகா
- ஜெயராம்
- லைலா
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (எ) கோட் ‘ இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தியாவின் ரகசிய ஏஜென்ட்களாக நான்கு நண்பர்கள் காந்தி(விஜய்), சுனில்(பிரசாந்த்), கல்யாண் (பிரபுதேவா), அஜய்(அஜ்மல்)… தீவிரவாதிகளின் செயல்களை முறியடிப்பதே அவர்களுக்குப் பிரதான கடமை. இவர்கள் யார் என்ன செய்கிறார்கள் என்பது குடும்பத்தாருக்கே தெரியாது. ஆனாலும் வழக்கமான வில்லன் விட்டுவிடுவானா? பழி, கொலை, தேச துரோகம், என நண்பர்கள் குழுவை செதில் செதிலாக்க முயல்கிறான். அவன் எப்படி இந்தக் குழுவை டார்கெட் செய்கிறான் பிளான் என்ன அதை காந்தி &கோ முறியடித்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை.
முதல் பாதி விஜய், சினேகா ஜோடி. வசீகரா, பார்த்தேன் ரசித்தேன், அள்ளித்தந்த வானம் படங்களை நினைவு படுத்தும் காட்சிகள். பிரபுதேவா, பிரசாந்த் என்று கலந்து கட்டி.. ஆக்ஷன் பேக்கேஜில் பரபரப்பாய் செல்கிறது படம். இடைவேளையில் இன்னும் மாஸாக நிற்கிறது. தொடரும் படத்தில் வில்லன் துவங்கி அத்தனையும் வெங்கட் பிரபு மொமெண்ட் ஷாக்.
விஜய் … தனக்குள் இருக்கும் நடிகன் சரியாக வெளியேறும் தருவாயில் இவர் சினிமாவுக்கு முழுக்குப் போடுவது வருத்தம்தான். குறிப்பாக மருத்துவமனைக் காட்சியில் செய்வதறியாது வந்து நின்று கை கால் உதறக் கலங்குவது துவங்கி பல இடங்களில் மனிதர் நடிப்பில் அசத்துகிறார். மேலும் அப்பா – மகன் என இரு வேடங்களிலும் பயன்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பத் தடை தாண்டி அவர் நடிப்பு மிளிர்கிறது.
பிரசாந்த் இந்தக் கதைக்கு ஏன் ஒப்புக்கொண்டார் என யோசிப்பதற்கே படம் முழுக்க் வெங்கட் பிரபு காட்சிகள் யோசித்திருப்பார் போல. மனிதர் ஒவ்வொரு காட்சியிலும் விஜய்க்கு ஒரு மாஸ் சீன் எனில் பிரசாந்த் மட்டும் சும்மா இல்லப்பு என்கிற ரீதியிலேயே காட்சிகள் கடக்கின்றன. சின்ன வயசுல இருந்தே நீ ஓவர் ஆக்டிங் என பிரசாந்தைக் கலாய்க்கும் விஜய் , வெங்கி ஸ்பெஷல் ‘ நக்கல்யா உனக்கு ‘ மொமெண்ட்.
பிரபு தேவா, அஜ்மல் , ஜெயராம் என அத்தனை பேரும் அவரவர் ஏஜெண்ட் வேலைகளை சரியாகச் செய்கிறார்கள்.
சினேகா , லைலா, த்ரீஷா என இப்போதைய நடிகைகளை எல்லாம் ஓரங்கட்டி ஒஸ்தியாக நிற்கிறார்கள். நடிப்பு, நடனம், அழகு என மீனாட்சி சௌத்ரி, உள்ளிட்ட மற்ற இளம் நடிகைகள் படத்தில் இருப்பினும் பெரிதாக இந்த சீனியர் நடிகைகளை ஓவர்டேக் செய்யாமல் இருப்பது சற்றே வருத்தம். ஆனாலும் ஓல்ட் ஈஸ் கோல்ட் என்கிற விதத்தில் மகிழ்ச்சி.
படத்தில் விஜய் ரசிகர்களுக்கான மாஸ் காட்சிகள் , திடீர் திருப்பங்கள், திடீர் சிறப்புத் தோற்றங்கள் என கேட்ட அனைத்தும் கிடைத்தும் கூட என்னவோ மிஸ்ஸிங் எனத் தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் ஸ்பை ஏஜெண்ட் என்னதான் செய்கிறார்கள். ஒரு தீவிரவாத கும்பலை டார்கெட் செய்யும் ஆபிசர்களுக்கு எவ்வளவு பொறுப்புகள் இருக்கும். இங்கிருந்து ஒவ்வொர் ஊருக்கும் போகிறார்கள், வருகிறார்கள் அவ்வளவே. ஆனால் என்ன வேலை, என்ன மிஷன் என்பதற்கு தெளிவான எந்தவொரு விளக்கமான காட்சிகளும் இல்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் மோகன் , நன்றாகத்தான் நடிக்கிறார். ஆனால் அவர் வில்லன் என அவரே அடித்துச் சத்தியம் செய்தாலும் அதெல்லாம் ஒத்துக்க முடியாது மொமெண்ட்தான்.
AI தொழில்நுட்பத்தில் கேப்டன் விஜயகாந்த், மகன் விஜய் கேரக்டர் மிக நல்ல மெனெக்கெடல். அதற்கான யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசைக் கோர்வையும், தீம் பாடல்களும் கூட பளிச் ரகம். பாடல்களில் விட்டதை பின்னணி இசையில் பிடித்திருக்கிறார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் ஸ்பெஷல். சில இடங்களில் உண்மையான வீடியோக்களையும், காட்சிகளையும் கலந்தது அருமை.
மொத்ததில் ‘த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்‘ படம் பொதுவான பார்வையாளனுக்கு இது எல்லாம் சேர்த்துதான் விஜய் என்கிற வெற்றிக் குதிரையையே ஜெயிக்க வைக்க முடியும் எனில் மற்ற நடிகர்கள் நிலமை என்ன? இதற்கு மனதில் நிற்கும்படி ஒரு கதை செய்திருக்கலாமே என்னும் எண்ணம் தோன்ற வைக்கும். ஆனால் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் டபுள் மாஸ் விருந்துதான்.
The post கோட் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.