×

பழவேற்காடு உப்பங்கழி ஏரியில் 37 மீனவ குடும்பங்கள் மீன்பிடிக்க செல்ல உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: போலீசார் உறுதி

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு உப்பங்கழி ஏரியில் கோட்டை குப்பம் ஆண்டி குப்பம் நடுவூர் மாதா குப்பம், கிராமத்தினர் சுழற்சி முறையில் தலா இரண்டு திசையாக அண்ணாமலைச்சேரி வடக்கு திசை  வரை ஒரு பிரிவினரும், கிழக்கு திசை முகத்து வாரம் வரையிலும் மற்றொரு பிரிவினரும் பாரம்பரியமாக இறால் மீன்பிடித் தொழில் செய்து வந்தனர்.  இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு ஆண்டி குப்பம் கிராமத்தை சேர்ந்த 2 பிரிவு வடக்கு கிழக்கு என 4 பிரிவாக பிளவு ஏற்பட்டு ஒரு பிரிவில் ராஜா மற்றும் செல்வமும், மற்றொரு பிரிவில் சங்கர் மற்றும் தவமணி  ஆகியோர் பிரிந்து செயல்பட்டனர். இதில் சங்கர், தவமணி தொழில் செய்யும் பகுதியில் செல்வம் தரப்பு அத்துமீறி மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இதனை ஏற்றுக்கொள்ளாத தவமணி தரப்பினர் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பொன்னேரி கோட்டாட்சியர் செல்வத்திடம் புகார் மனு அளித்தனர்.  புகாரின் மீது இருதரப்பினரையும் கோட்டாட்சியர் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோட்டாட்சியர் புதிய உத்தரவைப் பிறப்பித்தார் அதில் அத்துமீறி செல்வம் தரப்பினர் சங்கருடன் தொழில் செய்வது உறுதி செய்யப்பட்டு இனி வரும் காலங்களில் சங்கருடன் செல்வம் சேர்ந்து தொழில் செய்ய வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட தவமணி தரப்பினர் ராஜாவுடன் சேர்ந்து தொழில் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதனை மதிக்காமல் செல்வம் தரப்பினர், தவமணி தரப்பினரை தொழில் செய்ய விடாமல் தடுத்தனர்.இதனால் மாவட்ட வருவாய் அலுவலரிடம்  புகார் தெரிவிக்கப்பட்டு இரண்டு தரப்பினரையும் அழைத்து நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதுவும் தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி பழவேற்காடு மீனவர் கூட்டமைப்பு சார்பில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அதிலும் ராஜா, தவமணி தரப்பினர் ஒரு பகுதியாகவும் சங்கர், செல்வம் தரப்பினர் ஒரு பகுதியாகவும் ஏரியில்  இறால் மீன் பிடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஏற்காத செல்வம் தரப்பினர் தொடர்ந்து தொழில் செய்யவிடாமல் தவமணி தரப்பினரை தடுத்தனர்.இதனால் ஆண்டி குப்பத்தை சேர்ந்த  தவமணி தரப்பினர் 37 குடும்பங்கள் மீன் பிடிக்காமல் வருவாய் இழந்த சூழ்நிலையில்  மீனவ கூட்டுறவு சங்க தலைவர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கடந்த 1ம் தேதி அவசர வழக்காக விசாரணை தொடங்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு 22ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் உத்தரவையும், சமுதாய கூட்டமைப்பு தீர்மானத்தையும் ஏற்று பாதிக்கப்பட்ட 37  குடும்ப மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்ய அமல்படுத்த உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து நேற்று மூத்த வழக்கறிஞர் ஹேமலதா மற்றும் வழக்கறிஞர் லிக்கிதா, மீனவப் பிரதிநிதி தவமணி ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நாளை முதல் மீன் பிடிக்க செல்லும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்ததாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்….

The post பழவேற்காடு உப்பங்கழி ஏரியில் 37 மீனவ குடும்பங்கள் மீன்பிடிக்க செல்ல உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: போலீசார் உறுதி appeared first on Dinakaran.

Tags : Palavekadu ,Tiruvallur ,Tiruvallur district ,Kot Kuppam ,Andi Kuppam ,Madhuvur Mata ,Kuppam ,lake ,Dinakaran ,
× RELATED மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி மாயம்