×

சாலா விமர்சனம்

வடசென்னை ராயபுரத்தில் பிரபலமான பார்வதி பாரை ஏலத்தில் எடுக்க, கட்டப்பஞ்சாயத்து குழுக்களைச் சேர்ந்த அருள்தாஸ், சார்லஸ் வினோத் மோதிக்கொள்கின்றனர். அத்தொகுதியில் எம்எல்ஏவுக்குப் போட்டியிடும் தமிழாசிரியருக்கு ஆதரவாக அருள்தாஸ் குரூப் செயல்படுகிறது. இது சக போட்டியாளர் சார்லஸ் வினோத்துக்குப் பிடிக்காததால் தமிழாசிரியரைக் கொல்கிறார். பகை முற்றுகிறது. எம்எல்ஏவுக்கு அருள்தாஸ் போட்டியிடுகிறார். அவர் இழந்த பார்வதி பாரை மீட்டுக்கொடுப்பேன் என்று சிறுவயதிலேயே சபதம் செய்த தீரன், பார்வதி பாரை மீட்கிறார்.

மதுக்கடைகளை மூட சக ஆசிரியைகள், மாணவ, மாணவிகளுடன் அறப்போராட்டத்தில் ஈடுபடுகிறார், ஆசிரியை ரேஷ்மா வெங்கடேஷ். அவரைக் காதலிக்கும் தீரன், அருள்தாஸ் குழுவை தீர்த்துக்கட்ட வரும் சார்லஸ் வினோத் குரூப்பை என்ன செய்தார்? ரேஷ்மா வெங்கடேஷை திருமணம் செய்தாரா என்பது மீதி கதை. மதுவால் ஏற்படும் தீமைகளை, படம் முழுக்க மது அருந்தும் காட்சிகளுடன் கமர்ஷியல் படமாக வழங்கியுள்ளார், புது இயக்குனர் எஸ்.டி.மணிபால்.

ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுடியாகவும், தன்னை வளர்த்து ஆளாக்கியவருக்கு விசுவாசியாகவும், மனம் கவர்ந்த பெண்ணுக்காக மாறும் முரட்டுக்காதலனாகவும், நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார், சாலாவாக வரும் புது ஹீரோ தீரன். ஆனால், பல காட்சிகளில் ஒரேமாதிரி முகபாவனையுடன் வருகிறார். நன்கு படிக்கும் மாணவ, மாணவிகளைத் தத்தெடுத்து படிக்க வைக்கும் ஆசிரியையாகவும், மதுக்கடையே வேண்டாம் என்று துணிச்சலுடன் போராடும் சமூக ஆர்வலராகவும் சிறப்பாக நடித்துள்ளார், ரேஷ்மா வெங்கடேஷ்.

ரவுடிகளுக்கு ஜால்ரா அடிக்கும் கெட்ட போலீஸ் சம்பத் ராம், தீரனின் நண்பனாக ‘பன்ச்’ டயலாக் பேசும் ஸ்ரீநாத், செல்வாக்கு மிகுந்த ரவுடிகளாக அருள்தாஸ், சார்லஸ் வினோத் ஆகியோர், வழக்கமான நடிப்பை வழங்கி இருக்கின்றனர். பீர் குடிக்க ஆசைப்பட்டு உயிரை விடும் 3 நண்பர்களும் கவனத்தை ஈர்க்கின்றனர். ரவீந்திரநாத் குருவின் கேமரா, காட்சிகளைப் பிசிறின்றி பதிவு செய்துள்ளது. தீசனின் பின்னணி இசை, காட்சிகளைக் கடத்த உதவியுள்ளது. மதுவினால் ஏற்படும் தீமைகளைச் சொன்னவிதத்துக்காக பாராட்டலாம். மற்றபடி புதுமை இல்லை.

The post சாலா விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aruldas ,Charles Vinod ,Kattapanchayat ,Parvati ,Bar ,Rayapuram, North Chennai ,Aruldas Group ,MLA ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டி.என்.இ.பி பணியாளர் கூட்டமைப்பின்...