×

திருமண தடை நீக்கும் குழந்தை பாக்கியம் அருளும் சாட்சிநாதேஸ்வரர் கோயில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சாட்சிநாதேஸ்வரர் கோயில்.  மூலவர்  சாட்சி நாதேஸ்வரர், புன்னைவனநாதர். அம்பாள் கரும்பன்ன செல்லி.  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் , அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும்.

கோயில் வரலாறு

பிரளய வெள்ளம் வந்தபோது புறம்பாய் இருந்தமையால் புறம்பயம் என்று பெயர். ரத்தினவல்லி என்ற கன்னிப் பெண் தனக்கென்று உறுதிசெய்யப் பெற்றிருந்தவருடன் திருமணமாகுமுன் இவ்வூருக்குவந்தாள். அப்போது மணாளனை பாம்பு கடித்து இறந்தமையால் அவள் வருந்தி அழுதாள். அப்போது அவ்வூருக்கு வந்திருந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பியருளி ரத்தினவல்லிக்கு திருமணம் செய்து வைத்தார். இறைவன் சான்றாக நின்றருளினார். இதனால் இறைவன் சாட்சிநாதர் என்று பெயர் பெற்றார். இதற்கு வன்னிமரமும் ஒரு சான்றானதாக கருதப்படுகிறது. வன்னிமரம் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 46வது தேவாரத்தலம் ஆகும்.     

தலப்பெருமை   

இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்குஇல்லை. தட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். அகத்தியர்,பிரமன், சனகாதி நால்வர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட தலம். கோயிலின் கிழக்கேயுள்ள குளக்கரையில் தட்சிணா மூர்த்தியுள்ளார். கிழக்கு நோக்கிய கோபுரவாயில், முதற்பிரகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர்,சனந்தனர், விசுவாமித்திரர் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.  இரண்டாவது பிரகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது. குளத்தின் தென்கரையில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இதற்கு மேலே சட்டைநாதர் சன்னதி உள்ளது.

திருவிழா
   
 
மாசிமகத்தில் 10 நாட்கள் உற்சவம், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களாகும். கோயில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். இக்கோயில் சாட்சிநாதரை தரிசித்தால் திருமண தடை நீங்கும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும் , கல்வி, கேள்வி ஞானங்களில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Tags :
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்