×
Saravana Stores

கொட்டுக்காளி வி ம ர் ச ன ம்

பிளஸ் டூ படித்த தனது முறைப்பெண் மீனாவை (அன்னா பென்) உடனே திருமணம் செய்துகொள்ளாத பாண்டி (சூரி), அவரைக் கல்லூரியில் படிக்க அனுப்புகிறார். அங்கு மாணவனுடன் காதல் வயப்பட்ட மீனா, பாண்டியை திருமணம் செய்ய மறுக்கிறார். தொடர்ந்து யாரிடமும் பேசாமல் மவுனமாக இருக்கிறார். இதனால் அவருக்குப் பேய் பிடித்துவிட்டதாக நினைக்கும் குடும்பத்தினர், ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அங்கு நடப்பது வேறு. மீனாவுக்கு நிஜமாகவே பேய் பிடித்திருக்கிறதா? பாண்டிக்கும், அவருக்கும் திருமணம் நடந்ததா என்பது மீதி கதை.

‘விடுதலை 1’, ‘கருடன்’ என்று கதையின் நாயகனாக நடித்த சூரி, கேரக்டர் மீது நம்பிக்கை இருந்தால், இப்படியும் நடிக்கலாம் என்று பாடம் நடத்தியுள்ளார். இயல்பு மீறாத பாண்டியாக, கடைசிவரை தனது மாறுபட்ட நடிப்பில் அசத்தியிருக்கிறார். படம் முழுக்க தொண்டையைக் கவ்விய குரலில் பேசியிருப்பது, கேரக்டருக்கான நியாயத்தைச் சேர்க்கிறது. மீனாவாக வரும் அன்னா பென், கிளைமாக்ஸில் ஒரு வார்த்தை மட்டுமே வசனம் பேசுகிறார். மற்றபடி அமைதியான முகம், அகலமான கண்கள், வெறித்த பார்வை என்று, அனைத்து உணர்வுகளையும் ஆடியன்சுக்குக் கடத்துகிறார். எவ்வளவு அடி, உதை வாங்கினாலும் பிடிவாதத்தைத் தளர்த்தாத அவரது குணமும், அவருக்காகவே உள்ளம் உருகுவதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பாண்டியின் அக்கறையும், அற்புதமான காதல் ரகம்.

மீனாவின் அம்மா, பாண்டியின் சகோதரிகள், இதர குடும்ப நபர்கள், கடவுளுக்கு நேர்ந்துவிட்ட சேவல், சிறுவன், மாட்டை அடக்கும் சிறுமி, பூபாளம் பிரகதீஸ்வரன் உள்பட அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர். ஆட்டோவும், இருசக்கர வாகனங்களும் அற்புதமாக இயக்கப்பட்டுள்ளது. கிராமத்துப் பயணத்தை, அந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை, இயற்கை வெளிச்சத்தில், படம் முழுக்க இசையின்றி உருவாக்கிய ‘கூழாங்கல்’ பி.எஸ்.வினோத் ராஜ், உண்மையிலேயே மாற்றுச்சினிமாவுக்கு பலமான அடித்தளம் அமைத்திருக்கிறார்.

வணிக சினிமா உலகில், அவரது துணிச்சலான முயற்சிக்கு தோள் கொடுத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனையும் பாராட்டியாக வேண்டும். பெண்ணுக்குப் பேயோட்டும் சாமியாரின் செயல்களின் மூலம் இச்சமூகத்தின் இன்னொரு பக்கத்தை செவியில் அறைந்து கேள்வி கேட்டு, பதிலை மக்களே தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டிருப்பது உலக சினிமா பாணி. அதை ‘கொட்டுக்காளி’ சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. காட்சிகளின் நீளமோ ரசிகர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் சக்திவேல், ஒலி வடிவமைப்பாளர்கள் சுரேன்.ஜி, எஸ்.அழகியகூத்தன் ஆகியோர், கூடுதல் பலம்.

The post கொட்டுக்காளி வி ம ர் ச ன ம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kotukkali Vimar Sanam ,Pandi ,Suri ,Meena ,Anna Ben ,Two ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சத்துணவு ஊழியர்கள் போராட்டம்