×

அடிமுடி காணலில் ஹரி தேடிய திருவடி

‘ஆக்கல்’ எனும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு தான்தான் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்கிறோம் எனும் அகங்காரம் கிளைவிட்டது. அருகேயிருந்த விஷ்ணுவிடம், ‘‘உமக்குத் தெரியுமா, நீர் என்னதான் உயிர்களைக் காத்தாலும், நான் சிருஷ்டிக்கவில்லையெனில் உமக்கே வேலையில்லை’’ என கேலி பேசினார். ‘‘பிரம்மனே, நீர் படைப்பது இருக்கட்டும். அந்த ஜீவனை காக்க வேண்டாமா? அதனுடைய சந்தோஷம் முக்கியமில்லையா? உன்னுடைய படைப்புகளுக்கு அழகு சேர்ப்பதே நான்தான். நான் காக்கவில்லையெனில் உன் படைப்புகள் அழிய வேண்டியதுதான். பிறகு உமக்கென்ன வேலை இருக்கிறது. அதனால் என் தொழில்தான் உயர்ந்தது. இதிலிருந்தே நான்தான் உயர்ந்தவன் என்பது வெளிப்படை,’’  விஷ்ணு எதிர்வாதம் செய்தார். அப்போது அவர்கள் மத்தியில் ஒளியொன்று ஊடுருவியது.

சட்டென்று நெருப்பு ஸ்தம்பம் எனும் அனல் கக்கும் தூணாக ஈசன் வானையும், பூமியையும் ஊருடுவி சுழன்று நின்றார். பிரம்மாவும், விஷ்ணுவும் பிரமிப்போடு பார்த்தார்கள். எங்கெல்லாம் நான் எனும் அகங்காரம் முற்றுகிறதோ அங்கெல்லாம் ஞானப் பிழம்பாக ஈசன் வந்திறங்குவது, ஞானம் எனும் சிவத்திற்கு அந்நியமாக வேறெந்த வஸ்துவும் இல்லையெனக் காட்டும் தத்துவம்தான். ‘‘உங்களுக்குள் யார் பெரியவர் என்பதுதானே உங்களின் வாதம்? அதை நான் சொல்லலாமா?’’ என்று கேட்டார். ‘‘ஆஹா... சிவனாரின் தீர்ப்புக்கு ஞாலமே கட்டுப்படுமே. நாங்கள் ஏற்க மாட்டோமா என்ன!’’ என இருவரும் சேர்ந்தே பதில் உரைத்தனர்.‘‘என் இந்த அக்னி ரூபமான உருவின் அடியையும், முடியையும் முதலில் யார் காண்கிறாரோ அவரே பெரியவர்’’ என்றார் ஈசன்.

இதைச் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே பிரம்மா அன்னப் பறவையாக வானோக்கிப் பறந்தார். ஆதியில் வராக அவதாரம் எடுத்த பெருமாள், மீண்டும் வராகமாக பூமியை குடைந்தார். அப்படி ஹரியான விஷ்ணு, வராகராக பூமியை துவாரமிட்டு குடைந்த தலமே ‘அரி துவார மங்கலம்’. இந்தப் புராணம் திருவண்ணாமலை
புராணத்தோடு தொடர்பு கொண்டது.அண்ணாமலையில் அண்ணாராக, அக்னி மலையாக சிவன் இருக்க, ஹரி எனும் அரி பூமியை குடைந்து ஈசனின் அடியை தேடிய தலம் இதுவேயாகும். இதற்குப் பிறகு பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் முடிஅடி காண இயலாது திகைத்து ஈசனையே சரணடைந்தனர். ஈசனின் அடியைக் காண பூமியைத் தோண்டி தோல்வியோடு மீண்டும் விஷ்ணு வெளிவந்த தலமும் இந்த அரித்துவாரமங்கலம்தான். இத்தலத்தை, தேனொழுகும் தமிழில் நாயன்மார்கள் ‘திரு அரதைப் பெரும்பாழி’ என்றனர்.

சோழர் கால தொன்மையில் கோயில் இன்றும் மிளிர்கிறது. இது பஞ்ச ஆரண்யத் தலங்களுள் ஒன்று. கிழக்கு நோக்கி, ராஜகோபுரம் கம்பீரத்தோடு நிமிர்ந்திருக்கிறது. எதிரே திருக்குளம் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புற மண்டபத்தில் ஈசனும், அம்பாளும் தனித்தனி சந்நதிகளில் வீற்றிருக்கின்றனர்.ராஜகோபுரத்திலிருந்து நேரே மூலவராம் பாதாளேஸ்வரர் சந்நதி நோக்கி நகர்கிறோம். வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசன் இத்தலத்தில் லிங்க உருவில் அருட்பாலிக்கிறார். அதனாலேயே ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும் பள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். ஏதோவொரு அரூபமான... விவரித்தலுக்கு அப்பாற்பட்ட சக்தியொன்று அங்கு மையமிட்டிருப்பதை பாதாளேஸ்வரர் சந்நதியில் உணரலாம். வராகர் அதல, விதல, சுதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். இத்தல ஈசனை சரணாகதி உற்றால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது தலம் கூறும் ரகசியம்.

அம்பாள், நேற்று திருமணம் முடித்த பெண்போல, பேரழகோடு நின்ற கோலத்தில் அருள்பரப்புகிறாள். அருளையும், ஆனந்தத்தையும் பொழியும் கண்கள், எப்போதும் மெல்லிய புன்னகையில் நம் கவலைகளை விரட்டும் அநாயாசத் தோற்றம். ஜகத்தின் அழகே இவள்தான் என்பதால், அலங்கார அம்மை என்று இத்தலத்தில் அழைக்கப்படுகிறாள். திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொண்டு கல்யாண அலங்காரத்திற்கு தகுதியாகி வருவது இங்கு வெகு சகஜம்.அம்பாளை தரிசித்து அருகேயே உள்ள  தல விருட்சமான வன்னிமர நிழலில் அமரலாம். மரத்தடியிலேயே பிள்ளையார் சிலைகள். தியானம் செய்ய சிறந்த இடமாக இது விளங்குகிறது. கோயிலின் பிராகாரத்தை சுற்றி வந்தால் தெற்கே தட்சிணாமூர்த்தியையும், மேற்கே லிங்கோத்பவரையும், வடக்கே பிரம்மாவையும் தரிசிக்கலாம். வலம்வரும் போதே சோழர்களின் கலைநுணுக்கத்தை கண்ணுறலாம். கற்களின் பழமை நம்மை ஆயிரம் வருடங்களுக்கு பின்னால் அழைத்துச் செல்கிறது.

ராஜகோபுரத்தின் இடப் பக்கத்திலுள்ள மண்டபத்தில், நீண்ட மேடைபோன்ற அமைப்பில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், சந்திரன், சுந்தரர், சம்பந்தர் மற்றும் பைரவரை தரிசிக்கலாம். அதேபோல பாதாளேஸ்வரர் சந்நதிக்கு அருகில் கஜலட்சுமியையும், மாரியம்மனையும் தரிசிக்கலாம். அம்பாள் சந்நதிக்கும், இறைவன் சந்நதிக்கும் இடையே இருக்கும் சுவரில் மிகவும் மங்கலான வராகம் போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. மேற்குப் பிராகாரத்தில் அம்மன் சந்நதிக்கும், சுவாமி சந்நதிக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் சந்நதி அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தக் கோயிலை வலம் வந்து வணங்கி எழுந்தால் பாதாளேஸ்வரர் இங்கு வானுயர காட்சியளிப்பதை மனதால் உணரலாம். கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது. தஞ்சாவூரிலிருந்தும் செல்லலாம்.

Tags : Hari Siyati Thiruvadi ,
× RELATED கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி