சிந்தை தெளிய வைப்பாள் சிங்காரநாயகி

குபேர தனபதி என்ற அரசன் சிவபுரம் எனும் ஊரை ஆண்டு வந்தான். திடீரென்று அந்த மன்னனுக்கு மனநோய் பீடித்தது. அரசனுக்கு நோய் வந்தால் வைத்தியத்திற்கு ஏது குறை? எத்தனையோ மருத்துவர்கள் வந்து பார்த்தும் நோய் குணமாகவில்லை. அதனால் ஆருடம் பார்த்தால் நோய்க்கான காரணம் தெரியும் என்பதால் ஆருடம் பார்த்தார்கள். அதில் அரசன் செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள் ஒரு செப்பேட்டில் ஆலயத்தில் தெற்குநோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் அருகில் உள்ளது என பதில் கிடைத்தது. அவ்வாறே அந்த செப்பேட்டை எடுத்துப் படிக்கும்போது எல்லோரும் அதிர்ச்சியுறுகின்றனர். அவ்வாறு அதிர்ச்சியுறும் வண்ணம் அந்த செப்பேட்டில் என்னதான் எழுதியிருந்தது? அரசன் குபேரதனபதி மன நோயிலிருந்து குணம் பெற வேண்டுமானால் ஒரு குழந்தையை அவர்கள் பெற்றோர் முன்னிலையிலேயே அவன் பலியிட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. அனைவரும் அதிர்ச்சியுறாமல் என்ன செய்வார்கள்? சரி, யார் குழந்தையைத் தர முன்வருவார்கள்? திகைத்தனர் அனைவரும்.

ஒரு நாள் சிவபுரத்து இறைவனைத் தொழுதிட குழந்தையுடன் வந்தனர் ஒரு தம்பதியர். மன்னரது பணியாட்கள் அவர்களை மன்னரின் விருந்தினராக அவரது மாளிகையில் தங்க வைத்தார்கள். சிலநாட்கள் குழந்தையுடன் அவர்கள் சுகபோகத்தில் திளைத்ததோடு, சிவபுரத்து ஈசனை தினமும் வணங்கியும் வந்தார்கள். ஒரு நாள், மன்னனின் அமைச்சர் இந்த தம்பதியை அணுகி, அரசனின் மன நோயைப் பற்றி விளக்கி, செப்பேட்டில் வந்துள்ள பிராயச்சித்தத்தைப் பற்றி எடுத்துக் கூற, அதைக் கேட்ட தம்பதியர் திடுக்கிட்டு அங்கிருந்து தப்பியோட முடிவு செய்தனர். ஆனால் அரசன் விருந்தோம்பிய பண்பும் அவர்கள் நினைவுக்கு வந்தது. நன்றிக்கடன் தீர்க்காமல் அங்கிருந்து செல்வது பெரும்பாவம் என்று உணர்ந்த அவர்கள், மன்னரின் பிராயச்சித்தத்திற்கு தம் குழந்தையைத் தர முன்வந்தார்கள். ஆனால் அவர்கள் முன்னாலேயே அந்த பலி நிறைவேற்றப்படவேண்டும் என்ற நிபந்தனைதான் அவர்களைப் பெரிதும் வாட்டியது. சித்தம் கலங்கி, செய்வதொன்றும் அறியாது அவர்கள் பரிதவித்தனர்.

கருணையே உருவானவன் ஈசன். அவன் உயிர் பலி கேட்பானா? அதுவும் பெற்றோர் மனம் வருந்த அவர்கள் முன்னிலையிலேயே இப்படிக் கொடுமையாக பலியிட பார்த்துக் கொண்டிருப்பானா? நம்முடையது, நம்முடையது என நம்மைச் சுற்றிலும் நாம் போட்டுக் கொள்ளும் சிறிய வட்டத்திலிருந்து நம்மை வெளிக் கொணர்ந்து மற்றவர்களின் துன்பத்தையும் பார்த்து அவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையை வளர்த்திட ஈசன் அருளும் அரிய வாய்ப்புதான் இது. அரசனின் உபசரிப்பால் அவர் வயப்பட்டிருந்த தம்பதியர் தங்கள் குல விளக்கை தியாகம் செய்ய முடிவு செய்த அந்த நாளும் வந்தது. கார்த்திகை மாதம். முழுநிலவு வானத்தில் பிரகாசிக்கும் பௌர்ணமி நாள். அரசனின் மனநிலை சரியாகி, நாடு நலம் பெற சிறுவனை பலியிட சிவபுரம் அழைத்து வந்தனர். கலங்கிய நிலையில் சிறுவனின் தாயும் தந்தையும் ஈசன் முன் கதறி அழுதனர்.

எந்த வினைப்பயனோ தெரியவில்லை. பால் மணம் மாறா குழந்தையை பலி கொடுக்கும் நிலைமைக்கு ஆளானோம். இதிலிருந்து மீள வழியொன்று கூறாயோ எனக் கேட்டு மன்றாடினர். ‘அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம். அம்பிகையிடம் முறையிடுங்கள்’ என ஈசன் அசரீரியாய் உரைத்தான். சிங்காரவல்லி என்ற திருநாமம் கொண்டு சரணடைந்தோர்க்கு தஞ்சமளித்திடும் அம்பிகை, கேட்காமலே வரமருளும் தாயல்லவா? கேட்டு விட்டால் சும்மா இருப்பாளா? தம்பதியரின் கோரிக்கையைக் கேட்டதும் கிளி உருக் கொண்டாள் அம்பிகை. சிறுவனை வெட்டப் போகும் சரியான தருணத்தில் அங்கு பறந்து சென்று நேரே வெட்டப்போகும் அரசனின் கையில் அமர்ந்தாள். ‘மன்னா! உன் சோதனைக் காலம் இன்றோடு முடிந்தது. இனி உனது உடலும் மனமும் சீர் பெற்று நாட்டை நன்கு ஆட்சி புரிவீராக. குழந்தையை பலியிடவேண்டாம்’ என்று கூறி பறந்து சென்றாள் அம்பிகை.

குழந்தை காப்பாற்றப்பட்டுவிட்டது. அரசனும் பெரும்பழிக்கு ஆளாகாமல் தப்பித்தான். மனமும் உடலும் குணமான மன்னன் நாட்டை நன்கு அரசாள
உறுதி பூண்டு அதன்படி நடந்தான். குபேர தனபதி என்ற மன்னனால் வணங்கப்பட்டதால் இத்தலம் குபேரபுரம் ஆயிற்று. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத்தை தரிசித்து உள்ளே நுழைகிறோம். உட்கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டதாய் உள்ளது. மிகப்பெரிய கல்தூண்கள் கொண்ட விசாலமான மண்டபத்தை காண்கிறோம். உட்கோபுரத்தின் உட்சுவர்களில் சூரிய, சந்திரர்கள் நிற்க, கருவறையில் சிவபுரீஸ்வரர் திருவருள் பொழிந்து கொண்டிருக்கின்றார். பிராகாரத்தில் கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை போன்றோர் அருள்கின்றனர். இந்த தட்சிணாமூர்த்திக்கு அருகில்தான் குபேரதனபதி மன்னனின் மனநோய் நீங்கிட பரிகாரம் அடங்கிய செப்பேடு கிடைத்ததாம். அவர் அருகிலேயே திருமாலின் திவ்ய அவதாரமான வராகர் ஈசனை பூஜிக்கும் அழகான, அபூர்வமான சிலா வடிவம் காட்சியளிக்கிறது. இந்நிகழ்வை அப்பர் தன் திருத்தாண்டகத்தில் பாடிப் பரவசமாகிறார்.

வெளிச் சுற்றில் விநாயகர், சுப்ரமண்யர், கஜலட்சுமி போன்றோர் தரிசனம் கிட்டுகிறது. தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அம்பிகை திருவருள் புரிந்து கொண்டிருக்கிறாள். சிவபுரம் சென்று ஈசனையும், அம்பிகையையும் தரிசிப்போர்க்கு பாவங்கள் அழிந்து நன்மைகள் பெருகும் என்கிறது தலவரலாறு. அவர்கள் அருளோடு கட்டாயமாக மன அமைதியையும் பெறலாம். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்தால்தான் புரியும். கும்பகோணம்  திருவாரூர் நெடுஞ்சாலையில், கும்பகோணத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிவபுரம்.

× RELATED எமன் பாச கயிற்றை வீசிய சிவாலயம்