×

அழியாத செல்வம் தரும் ஸ்ரீ அகத்தீஸ்வரர்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பரதூர் கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இதுபற்றி கிராம மக்கள் கூறும்போது, இந்த கோவில் கட்டப்பட்டு 400 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். கட்டிடக்கலையின் அழகியலை விவரிக்கும்படியாக கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு வெளியே எவ்வளவு வெப்பம் அடித்தாலும் சாதாரணமாக கோவிலுக்குள் குளிர்ச்சியாக இருக்கும். இக்கோயிலின் உள்ளே விநாயகர், சுப்ரமணியர், அகத்தீஸ்வரர், அம்பாள் அகிலாண்டநாயகி, சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னதி, குருதட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களும்,அதற்கான கோவில்களும் உள்ளன.

மேலும் நடராஜர், அம்பாள், சோமாஸ்கந்தர், ஆடிபூரஅம்மன், நவராத்திரி அம்மன், நந்தி, நால்வர், தீர்த்தாழ்வார், முருகன், வள்ளிதெய்வானை, விநாயகர் உள்ளிட்ட தெய்வச்சிலைகள் உள்ளன. சமீபத்தில் பாதுகாப்பு கருதி இக்கோவிலில் உள்ள சாமி சிலைகளை கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் பத்திரமாக வைத்திருக்கின்றனர். பழமையான இந்தக் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தி கோவிலுக்குள்ளேயே லாக்கர் வசதி ஏற்படுத்தி சிலைகளை பத்திரப்படுத்தி வைக்கவேண்டும் என தெரிவித்தனர். தமிழகத்திலுள்ள சிவன்கோவில்களில் மேற்கு நோக்கிய 6 சிவன்கோவில்களில் இந்தக் கோயிலும் ஒன்று என்பது தனிச்சிறப்பு. அகத்திய முனிவர் இந்த சிவன் கோவிலுக்கு வந்து லிங்கவடிவ சிவனை வணங்கியதால் இக்கோவில் அகத்தீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

கோயிலின் ஸ்தலவிருட்சமாக வில்வமரம். ஆண்டின் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மூலவரான லிங்கவடிவ சிவனின்மேல் மூன்று நாட்கள் சூரிய ஒளி முழுமையாக படுகிறது. இக்கோயிலில் கடந்த 1931 ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. அகத்திய முனிவர் வழிபட்ட அகத்தீஸ்வரரை வழிபட்டால் அழியாத செல்வங்கள் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம். திருமணத்தடை, குழந்தையின்மை, தொழில்முடக்கம், நோய் நொடிகள் என அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றவர் அகத்தீஸ்வரர் என பக்தர்கள் கூறுகின்றனர். இந்த கோயிலில் ஆடிமாதத்தில் கிராமமக்கள் சிறப்பு விழா எடுத்து வழிபடுகிறார்கள்.

கோவிலுக்கு நாற்பது ஏக்கருக்குமேல் நிலம் இருந்தும் தற்போது வருமானம் இல்லாததால் தினசரி ஒருவேளை மட்டுமே தீபமேற்றப்படுகிறது. கோவிலுக்கு எதிரே உள்ள அழகிய நந்தவனக்குளம் தனது அடையாளத்தை இழந்து காணப்படுகிறது. தற்போது கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விரைவில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கோவிலுக்கான நிலத்தை மீட்டெடுத்து அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தி அதிலிருந்து வருகின்ற வருமானம் மூலம் கோவில் பராமரிப்புக்கு செலவிட வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

செல்வது எப்படி?

சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேத்தியாத்தோப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் பரதூர் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.

Tags : Sri Agathiswarar ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்