டப்ளின்: அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று டப்ளின் நகரில் நடந்தது. மழை காரணமாக 12 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியில் கேப்டன் பால்பரீன் புவனேஸ்வர்குமார் வீசிய முதல் ஓவரில் டக்அவுட் ஆனார். பால் ஸ்ட்ர்லிங் 4, கேரித் டிலேனி 8 ரன்னில் வெளியேறினர். ஹேரி டெக்டார், லோர்சன் டக்கர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். டக்கர் 18 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் ஹேரி டெக்டார் அதிரடியாக 29 பந்தில் அரைசதம் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் அயர்லாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன் எடுத்தது. ஹேரி டெக்டார் 64 (33 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர், டாக்ரேல் 4 ரன்னில் களத்தில் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சாஹல், புவனேஸ்வர்குமார், அவேஷ்கான், ஹர்திக்பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம்இறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 11 பந்தில் 3ப வுண்டரி, 2 சிக்சருடன் 26 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். பாண்டியா 12 பந்தில், ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 24 ரன் எடுத்தார். 9.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீபக் ஹூடா 47 (6 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ்கார்த்திக் 5 ரன்னில் களத்தில் இருந்தனர். அயர்லாந்து பந்துவீச்சில் கீரீக் யங் 2 விக்கெட் வீழ்த்தினார். 3 ஓவரில் 11 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய சாஹல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது மற்றும் கடைசி டி.20 போட்டி நாளை இதே மைதானத்தில் நடக்கிறது. வெற்றிக்கு பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: தொடரை வெற்றியுடன் தொடங்குவது சிறப்பானது. ஒரு அணியாக எங்களுக்கு வெற்றியுடன் தொடங்குவது மிகவும் முக்கியம். இதில் மிகவும் மகிழ்ச்சி. உம்ரான் மாலிக் தனது வாய்ப்புக்காக காத்திருந்தார். பழைய பந்தில் சிறப்பாக பந்துவீசுகிறார். அவர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தனர். ஹாரி ஆடிய சில ஷாட்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் மீண்டும் அயர்லாந்து கிரிக்கெட்டை வளர்த்து எடுப்பார் என நம்புகிறேன், என்றார்….
The post தொடரை வெற்றியுடன் தொடங்குவது சிறப்பானது; இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி appeared first on Dinakaran.