×

திடீர் போர்க்கொடி

மகாராஷ்டிர மாநிலத்தில் 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பின்னர் முதல்வர் பதவிக்கான மோதலில் இந்த கூட்டணி உடைந்தது. இதன்பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா தலைமையில் ‘மகா விகாஸ் அகாடி’ என்ற கூட்டணி உருவானது. இதையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறார். பாஜவின் கொள்கையோடு ஒத்துப்போகும் சிவசேனா கட்சி பதவியேற்ற நாள் முதல் ஒன்றிய அரசுக்கு முரணாக செயல்பட்டு வந்தது. இதனால் அடிக்கடி ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை உத்தவ் தாக்கரே கடைபிடித்து வந்தார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவைக்கான தேர்தலிலும், சட்ட மேலவை தேர்தலிலும் பாஜ சார்பில் நிறுத்தப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இது ஆளும் கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தவ் தாக்கரேவை முதல்வராக்கிய காங்கிரஸ் உள்பட சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜ வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாநில அரசின் மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதையடுத்து தாக்கரே ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள ஏக்நாத் ஷிண்டே திடீரென தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜ ஆளும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் போய் தஞ்சமடைந்தார். அவருடன் தற்போது 46 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. சொந்த கட்சி எம்எல்ஏக்களே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டு சிவசேனா ஆட்சியில்  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தான் அதிக லாபம் அடைந்துள்ளது. சிவசேனா கட்சி கொள்கைகளை தாக்கரே பதவிக்காக அவர்களிடம் அடகு வைத்துவிட்டார் என்று ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சொந்த கட்சி எம்எல்ஏக்களே தனக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும், நேரில் வந்து அவர்களே கடிதத்தை பெற்றுக்கொண்டு போய் ஆளுநரிடம் கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் மகாராஷ்டிர மாநில அரசியலில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாஜ ஆளும் மாநிலமான அசாமில் சிவசேனா எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே ஓட்டலில் தங்குவதற்கு முதல்வர் ஹிமாந்த் பிஸ்வாஸ் சர்மா உதவி செய்து வருகிறார் என்று குற்றம்சாட்டி அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகி மீண்டும் பாஜவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே சிவசேனா எம்எல்ஏக்களின் கோரிக்கையாக உள்ளது. சொந்த கட்சி எம்எல்ஏக்களை வைத்தே உத்தவ் தாக்கரேவின் கண்ணை குத்தி மீண்டும் தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மறைமுகமான அச்சறுத்தலில் பாஜ ஈடுபட்டுள்ளது. இந்த அரசியலை உத்தவ் தாக்கரே எப்படி சமாளிக்க போகிறார் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது….

The post திடீர் போர்க்கொடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Shiva Sena alliance ,2019 elections ,Maharashtra ,Chief Minister ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...