×

கோயில் திருவிழாக்களால் அய்யலூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை: அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை

வடமதுரை: கோயில் திருவிழாக்களால், அய்யலூரில் நேற்று ஆட்டுச்சந்தை களைகட்டியது. சந்தையில் விவசாயிகள், வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.    திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை கூடுகிறது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, தங்கள் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி ஆகிய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இந்தாண்டு முதல் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. விழாக்களில் ஆட்டுக் கிடா வெட்டி, பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அய்யலூரில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் ஆடு, கோழிகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். ஆடு, கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆடுகளின் எடை மற்றும் தரத்திற்கேற்ப ரூ.6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் 400 வரை விலை விலையானது. மேலும், செம்மறி ஆடுகள் மற்றும் சேவல்களும் அதிகளவு விற்கப்பட்டன. அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை வாரந்தோறும் கூடும் அய்யலூர் சந்தையில் குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதி இல்லை. இதனால், வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகள், விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஆடு வாங்க வரும் வியாபாரிகள் பணத்தை அச்சத்துடன் கொண்டு வருகின்றனர். இருளை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். எனவே, ஆட்டுச்சந்தையில் குடிநீர், மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post கோயில் திருவிழாக்களால் அய்யலூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை: அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aiyalur ,Temple Festivals ,NORTH MADURAI ,FESTIVALS ,AYALUR ,Ayyalur ,
× RELATED பெரியபாளையம் அருகே வடமதுரை...