×

வெடால் கிராமத்தில் இடிந்து விழும்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: வெடால் கிராமத்தில் சிதிலமடைந்து இடிந்துவிழும்நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு, புதிதாக நீர் தேக்கத்தொட்டி அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் சூனாம்பேடு அருகே வெடால் கிராமம் உள்ளது. இங்கு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால், தொட்டியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வந்தன. இதனால், கடந்த 2012-13ம் ஆண்டு ஊராட்சி நிர்வாகம் தொட்டியில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்து வண்ணம் பூசியுள்ளனர். இந்நிலையில்,  கடந்த சில மாதங்களுக்கு முன் தொட்டியின் ஒரு பகுதியிலிருந்து சிமென்ட் மீண்டும் உதிர்ந்து கீழே விழுந்துள்ளது.   மேலும், தொட்டியில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் வழியாக குடிநீர் கசிந்து வருகிறது.  இதனால், தொட்டி எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.  பழுதடைந்த இந்த நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம்  கோரிக்கை வைத்தனர்.  ஆனால், அதற்கான நடவடிக்கையில் ஊராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ இன்று வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இந்த பழுதான நீர்த்தேக்கத் தொட்டிகள் வரும் காலங்களில் பெரும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. எனவே,  தொட்டியை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய நீர் தேக்கத் தொட்டி அமைத்து தர அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரம மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்….

The post வெடால் கிராமத்தில் இடிந்து விழும்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vedal village ,Seyyur ,
× RELATED கடப்பாக்கம் – ஆலம்பரைகுப்பம் இடையே...