×

தாய்மொழியை நேசிப்போம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ம் தேதி வெளியாயின. இதில் தமிழ் பாடத்தில் 37 ஆயிரம் மாணவர்கள், 10 ஆயிரம் மாணவிகள் என 47 ஆயிரம் பேர் தேர்ச்சி அடையவில்லை. திருச்செந்தூர் மாணவி துர்கா 100க்கு 100 மதிப்பெண் பெற்றது மகிழ்வை தந்தாலும், சுமார் 5.16 சதவீத மாணவர்கள் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். கடந்த கல்வியாண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் முறையாக இயங்கவில்லை. ஆன்லைன் முறையில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்கள் செல்போன், டேப்லெட் போன்றவற்றின் மூலமே பாடங்களை படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளிட்டவைகளை பார்க்கத் தொடங்கி விட்டனர். இதன் காரணமாக மாணவர்கள் கல்வித்திறன் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். வரும் காலங்களில் தாய்மொழியான தமிழில் மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறுவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பும் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. தமிழர்களின் நாகரிகம் தொன்மையானது என கீழடி உள்ளிட்ட அகழாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுமென கடந்த 2010ல் முதல்வராக இருந்த கலைஞர் 20 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை கொண்டு வந்தார். கடந்தாண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு அரசுப்பணிகளில் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின் அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ் மொழியில் படிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், மொழியறிவு, வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்க மதுரையில் முற்றிலும் நவீனமயமாக ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கென கூடுதல் நிதியையும் ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொருவருக்கும் மொழியறிவு மிகவும் முக்கியம். எனவே, தாய்மொழியான தமிழை ஆர்வமுடன் கற்போம். மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடம், தமிழை கொண்டு சேர்க்கும் முயற்சியில் அனைவரும் கட்டாயம் ஈடுபட வேண்டும். இது நமது ஒவ்வொருவரின் தலையாய பொறுப்பும் கூட….

The post தாய்மொழியை நேசிப்போம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி