×

கருங்குழி பேரூராட்சியில் புதிதாக 4 குளங்கள் உருவாக்கம்

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் புதிதாக 4 குளங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  உருவாக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நீர்நிலைகளை உருவாக்கும் முயற்சியில் கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் மற்றும் நிர்வாகத்தினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி, கடந்த சில மாதங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் 4 குளங்களை புதிதாக உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த குளங்களில் மழைக்காலங்களில் நீர் நிரம்புவதன் காரணமாக அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலை மேம்பாடு அடைந்துள்ளது. இதனால், அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கோடை காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத நிலை உருவாகியுள்ளது. கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் கிடைக்கிறது. இதில், குறிப்பாக கருங்குழி 11வது வார்டுக்கு உட்பட்ட மலைபாளையம் மலைகோயில் போகும் வழியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளம் புதிதாக உருவாக்கப்பட்டது. மேலும், 12வது வார்டுக்கு உட்பட்ட ஏரி காலனி பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குளமும். 4வது வார்டுக்கு உட்பட்ட அண்ணாநகர் சுடுகாடு பகுதியில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குளம். இதேபோன்று, கருங்குழி பேரூராட்சி அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஒட்டி 30 சென்ட் பரப்பளவில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குளம் என 4 குளங்கள் கருங்குழி பேரூராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தந்த பகுதிகளில் வசிக்கும் அப்பகுதி மக்களுக்கு போதிய நீர் ஆதாரம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். புதிய நீர்நிலைகளை உருவாக்கிய பேரூராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்….

The post கருங்குழி பேரூராட்சியில் புதிதாக 4 குளங்கள் உருவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Karunkuzhi municipality ,Madhurantagam ,Karunkhuzi ,Chengalpattu District ,Madurandakam ,Dinakaran ,
× RELATED சிறப்பு பேரூராட்சிக்காக முதல்வர்...