×

குற்றாலநாதர், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்

தென்காசி: குற்றாலநாத சுவாமி கோயிலில் நேற்று தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று இரவு நடந்தது. தெப்பத்திரு விழாவிற்காக இலஞ்சி குமரன், வள்ளி, தெய்வானை, குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் மேள தாளங்கள் முழங்க சித்திரசபைக்கு அழைத்து வரப்பட்டு சித்திரசபையில் வைத்து பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சிவபூதகன வாத்தியங்கள் முழங்க சித்திரசபைக்கு எதிரில் உள்ள தெப்பத்தில் சுவாமி அம்பாள், இலஞ்சிகுமரன், வள்ளி தெய்வானை எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை சுற்றி வலம் வந்தனர். பூஜைகளை ஜெயமணிசுந்தரம் பட்டர், கணேசன்பட்டர், கண்ணன்பட்டர், மகேஷ்பட்டர் ஆகியோர் நடத்தினர்.

தெப்பம் அகல்விளக்கு மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் கோயில் உதவி ஆணையர் செல்வகுமாரி, அகஸ்தியர் சன்மார்க்கம் முத்துக்குமாரசாமி, முன்னாள் அறங்காவலர்கள் வீரபாண்டியன், தங்கம்பலவேசம், திமுக ஒன்றிய செயலாளர் ராமையா, கருப்பசாமி, பா.ஜ.நகர தலைவர் செந்தூர்பாண்டியன், திருமுருகன், பிலவேந்திரன், மேலகரம் ஈஸ்வரன், வர்த்தக சங்கம் வேல்ராஜ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர். உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவில் நேற்று தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10ம் திருவிழா நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. விழாவை யொட்டி தினமும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தன. நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா, பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜையும், இரவு சாயரட்சை பூஜை, ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளினர். அங்கு தெப்ப உற்சவம் நடந்தது. கோயில் கலையரங்கில் சமய சொற்பொழிவு, தேவார இன்னிசை கச்சேரி, பரத நாட்டியம் நடந்தது. காலை முதல் சிறப்பு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி செய்திருந்தார்.

Tags : Uvari Swayambulangai Swami Temple ,
× RELATED உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று துவக்கம்