×

நெல்லையில் போதிய விலை இல்லாததால் பூக்களை சாலையோரம் கொட்டிய விவசாயிகள்

நெல்லை: கேந்தி மற்றும் கோழி கொண்டை பூக்களுக்கு சந்தையில் போதிய விலை கிடைக்காததால் அவற்றை மானூரைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை ராமையன்பட்டி அருகே சாலையோரம் கொட்டிச் சென்றனர். நெல்லையில் மானூர், குத்தாலப்பேரி, லெட்சுமியாபுரம், குப்பனாபுரம், மடத்தூர், திருமலாபுரம், பள்ளமடை, பள்ளிக்கோட்டை, மாவடி, வெங்கலபொட்டல் உள்ளிட்ட மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் கேந்திபூ, கோழி கொண்டை பூ, ரோஜா, மல்லி உள்ளிட்ட பூக்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை நெல்லை சந்திப்பிலுள்ள பூச்சந்தைக்கே பெரும்பாலான விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இந்த ஆண்டு பூக்கள் நல்ல மகசூல் கிடைத்தது.  இந்நிலையில் நேற்று காலையில் மானூரில் இருந்து நெல்லைச் சந்திப்பு பூச்சந்தைக்கு கொண்டு சென்ற கேந்தி மற்றும் கோழி கொண்டை பூக்களுக்கு போதிய விலை கிடைக்காததால் அவற்றை திரும்ப எடுத்துச் சென்ற மானூரைச் சேர்ந்த விவசாயிகள், நெல்லை ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள சாலையோரம் கொட்டிச் சென்றனர். இதுகுறித்து மானூர் லெட்சுமியாபுரத்தை சேர்ந்த பூ விவசாயி இளையராஜாவிடம் கேட்டபோது, ‘அரை ஏக்கரில் கேந்தி பூ, அரை ஏக்கரில் கோழிகொண்டை பூ, அரை ஏக்கரில் ரோஜாப்பூ ஆகியவற்றை விவசாயம் செய்துள்ளேன். இதில் கேந்தி, கோழிகொண்டை பூக்களுக்கு மட்டும் ரூ.45 முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். 6 மாதத்தில் பூக்கக்கூடிய ரோஜா பூவுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகும். கேந்திபூ நாற்று ஒன்று ரூ.2க்கு வாங்கிவந்து நட்டு 45 நாட்களுக்கு பிறகு பூக்களை பறித்து நெல்லை சந்திப்பு பூச்சந்தைக்கு என்னை போல், மானூர் சுற்றுவட்டார விவசாயிகள் பலரும் விற்க கொண்டு செல்கின்றனர். இதில் நடவு, களைஎடுப்பு, பூச்சிமருந்து, ஆள்கூலி மற்றும் ேபாக்குவரத்து ஆகியவற்றுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோ கேந்தி, கோழிகொண்டை பூக்களுக்கு ரூ.10க்கும் குறைவாகவே எங்களுக்கு விலை கிடைக்கிறது. இதனால் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்த என்னைப் போன்ற விவசாயிகளுக்கு நஷ்டமே மிஞ்சுகிறது. எங்கள் பூக்களுக்கு போதிய விலை கிடைக்காததால் வேறு வழியின்றி அப்பூக்களை சாலையோரம்  கொட்டிச் செல்கிறோம்’ என்றார். இவரைப் போலவே பூ விவசாயம் செய்துள்ள மானூர் லெட்சுமியாபுரம் மகேஷ் (ஒரு ஏக்கர்), திருமலாபுரம் மாரியப்பன் (அரை ஏக்கர்), பள்ளமடை ராஜா (கால் ஏக்கர்), ராஜேந்திரன் (அரை ஏக்கர்) உள்ளிட்ட விவசாயிகளும் போதிய விலை கிடைக்காததால் கேந்தி, கோழி கொண்டை பூக்களை நெல்லை அருகே சாலையோரம் கொட்டிச் சென்றனர். இவர்கள் கூறுகையில், ‘கேந்தி, கோழி கொண்டை பூக்களுக்கு குறைந்தது ஒரு கிலோவுக்கு ரூ.40 கிடைத்தால் எங்களுக்கு கட்டுப்படியாக இருக்கும். ஆனால் ரூ.10க்கும் குறைவான விலைக்கு வியாபாரிகள் கேட்கின்றனர். ஓசூரில் இருந்து சேவல், கேந்தி உள்ளிட்ட பூக்கள் இங்கு அதிகம் விற்பனைக்கு வருவதால் உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பூக்களுக்கான தேவை குறைவதோடு, அதற்குரிய விலையும் கிடைக்கவில்லை.  பூ விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கச் செய்வதோடு, பூக்களுக்கு போதிய விலை கிடைக்க அரசு உதவி செய்தால்தான் எங்களைப் போன்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்’ என்றனர்….

The post நெல்லையில் போதிய விலை இல்லாததால் பூக்களை சாலையோரம் கொட்டிய விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Manoor ,
× RELATED கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் புறக்கணித்தார் அண்ணாமலை!