×

பிரம்மதேசம் கைலாச நாதர் கோயில்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பிரம்மதேசம் கிராமத்தில் பழமையான கைலாசநாதர் கோயில் உள்ளது. பிரம்மாவின் பேரனாகிய ரோமச முனிவர் இலந்தையடி நாதர் எனும் சிவ சுயம்புலிங்கத்தை இங்கு வழிபட்டுள்ளார். இக்கோயில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் பாண்டிய மன்னர், விஜயநகர அரசர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. நான்மறை வேதியர்களுக்காக இவ்வூர் தானமாக வழங்கப்பட்டதால் ராஜ ராஜ சதுர்வேதி மங்களம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தது.

இக்கோயில் சுவாமி கைலாசநாதர், அம்பாள் பிரஹந்நாயகி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். சூரிய தலமாக விளங்கி வருகிறது. இங்கு பிரம்ம தீர்த்தம், உரோமேச தீர்த்த கட்டம் உள்ளது. இலந்தை மரம் தல விருட்சமாக உள்ளது. இக்கோயிலில் காமிக ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்றுள்ள தலமான இங்குள்ள கல் சிற்பங்களில் இரு பெரிய யாழிகளின் வாயில் வெளியே எடுக்க முடியாத கல் குண்டுகள் உள்ளன. இக்கோயில் ராஜகோபுரம் விசுவநாத நாயக்கர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கன்னிமூல விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, நாலாயிரத்தம்மன், இலந்தையடிநாதர், பிச்சாடன கோல திருமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, சோழர் காலத்து கங்காளநாதர் மற்றும் நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன.

தினமும் அதிகாலை 5.40 மணிக்கு விஸ்வரூபம், காலை 9 மணிக்கு உச்சிகாலம், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை, இரவு 8.15 மணிக்கு அர்த்தசாம பூஜைகள் நடக்கிறது. தைப்பூசம், ஆவணித்திருவிழா, திருகார்த்திகை, திருவாதிரை உள்ளிட்ட திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அம்பாசமுத்திரம் நகரில் இருந்து வடமேற்கு பகுதியில் 4 கி.மீ தூரத்தில் பிரம்மதேசம் உள்ளது. அம்பை பஸ் நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்தும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. 

Tags : Brahmadeesam Kailasanathar Temple ,
× RELATED கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி