×

மங்கையரால் போற்றப்படும் பாவை நோன்பு

ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். 13 நிலைகளையும் 13 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில்  கம்பீரமாய் காட்சி தரும்  இந்த தலம், 108 வைணவத்தலங்களில் முதன்மை வாய்ந்ததாகவும், பூலோக  சொர்க்கம் என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் விழாக்கள் நடந்து கொண்டிருந்தாலும், இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவும்,  பாவை நோன்பும் சிறப்பு பெற்றது.புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.

மார்கழி திங்கள் மங்கையர்களுக்கு சிறப்பு வாய்ந்தது.  இந்த மாதத்தில் தான்  திருப்பாவை நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. கன்னிப் பெண்கள் மார்கழி மாதம் 30 நாட்களும் விரதம் இருந்து பெருமாளுடைய பெருமைகள், புகழ், சிறப்புகளை, காதலை பாசுரங்களாக பாடியதாக கூறப்படுகிறது. பண்பாடு, கலாசாரம், நாகரிகத்தின் அடித்தளம் ஆகியவற்றை இயக்க தன்மையான சக்தி வடிவத்தில் இருக்கிற பெண்ணில் வைத்து  நம் முன்னோர்கள் போற்றி பெண்ணின் பெருமையை காத்தனர்.

அப்படிப்பட்ட பெண்மை இயற்கையின் சுழற்சியில் வலிமை பெற்று வீரியம் அடைந்து நம் முன்னோர்கள் வகுத்த தன்மைகளுக்குள் இல்லாமல், மாறுபட்ட தன்மைக்குள் இயற்கையின் தூண்டுதலால் சென்று விட கூடாது என்ற நோக்கத்தில், வலிமை பெற்றிருக்கிற வீரியத்தை பிரம்ம முகூர்த்த குளியல், விரதம், சுக்கிர தன்மையான பெருமாள் போன்ற கணவனை அடைய வேண்டும் என்று கன்னிப் பெண்களை தவம் கொள்ள செய்து, திருமணமான பெண்களுக்கு கணவனையே கடவுளாக வரித்து வலிமையை பெற்று பெண்களின் மண வாழ்க்கையை மேம்பட செய்தனர்.

கன்னி பெண்களின் வீரியத்தை பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் குளித்து ஈர உடையுடன், பெருமாளை நினைத்து அவர் புகழ், பெருமை, காதல் போன்ற அம்சங்களை பாடல்களாக பாடி வீரியத்தை கடவுளின் பால் திருப்புவது தான் திருப்பாவை நோன்பு. மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதம் திருமண காலம், கன்னிப்பெண்கள் நல்ல ஆண் மகனை கணவனாக அடைந்து மண வாழ்க்கையை வளமுடன் வாழ வேண்டியே இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டாளை கன்னி பெண்ணாக கொண்டு பாவை நோன்பு எடுத்து ஒவ்வொரு தினத்துக்கும் ஒவ்வொரு பாசுரங்களாக 30 பாசுரங்கள் பாடி பெருமாளை கணவனாக அடைந்ததாக சொல்லப் படுகிறது.

நம் முன்னோர்களின் கலாச்சார வாழ்வியல் முறையில் ஒன்றான திருப்பாவை நோன்பை பெண்கள் கடைப்பிடித்து பெருமாளை மனமுருகி பிரார்த்தித்து, ஆராதித்து வளம் பெறவே ஏற்படுத்தினர். பாவை நோன்பின் போது ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டாள் சன்னதி கண்ணாடி அறையில் திருப்பாவை பாசுரத்தின் படி 30 நாட்களும் அலங்காரம் செய்யப்பட்டு பாவை நோன்பு கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி நோன்பு நாட்களில் கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில்களுக்கு சென்று இறை வழிபாடு செய்தால் கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலி பெண்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும்.  வாழ்வியல் நெறிகள் மேம்படும் என்பது ஐதீகம்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி