×

ஆவடி அருகே 2 கோயிலில் கொள்ளைபோன 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு: 3 பேர் தலைமறைவு

ஆவடி: ஆவடி அருகே 2 கோயில்களில் கொள்ளையடித்த 7 ஐம்பொன் சிலைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் முல்லை நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் பராமரித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து மாரியப்பன் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று காலை கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 4 ஐம்பொன் சிலைகள் மற்றும் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி செயின் திருடுபோனது தெரியவந்தது. இதேபோல் தண்டரை பகுதியில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோனது. இதுகுறித்து பட்டாபிராம் ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளையடிக்கப்பட்ட கோயில்களை பார்வையிட்டு கொள்ளையர்களை தேடினர். அப்போது, பட்டாபிராம் ரயில் நிலையத்தில் கோணி பையுடன் நின்றிருந்த 3 பேர், போலீசாரை பார்த்ததும் கோணி பையை தூக்கிவீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர். கோணி பையை போலீசார் பிரித்து பார்த்தபோது அதில் 7 ஐம்பொன் சிலைகள் இருந்தது தெரியவந்தது. ஆனால் கோயிலில் திருடிய 5 சவரன் தங்க தாலியை கையில் எடுத்துச்சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து ஐம்பொன் சிலைகளை மீட்டு கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஆவடி அருகே 2 கோயில்களில் கொள்ளைபோன 7 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post ஆவடி அருகே 2 கோயிலில் கொள்ளைபோன 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு: 3 பேர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Awadi ,Battapram ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்