×

அச்சன்கோவில் ஐயப்பன் கோயில் மஹோற்சவ திருவிழா கொடியேற்றம்

செங்கோட்டை: அச்சன்கோவில்  தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் மகோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் தமிழக கேரள பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் கேரளாவில் உள்ள ஐயப்பனின் 5 படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு சுவாமி ஐயப்பன் அரசனாக இருந்து ஆட்சி புரிவதாக ஐதீகம். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்தது. கேரளாவில் தேரோட்டம் நடைபெறும் ஒரே ஐயப்பன் கோயில் இதுவாகும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரிமலையிலும் அச்சன்கோவிலிலும் மட்டும்தான்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் மஹோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு சென்னையை சேர்ந்த சைலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினரின் நாராயண பாராயணம் பஜனை  நடந்தது. பின்னர் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 9.15 மணிக்கு பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் சபரிமலை தந்திரி கண்டரரு மோகனரு  கொடியேற்றி உற்சவ விழாவினை துவக்கி வைத்தார்.

அப்போது கருட தரிசனம் கிடைத்ததால் கோயில் வளாகத்தில் குழுமியிருந்த தமிழக கேரள பக்தர்கள் உற்சாக சரண கோஷம் எழுப்பினர். கொடியேற்றத்தினை தொடர்ந்து 18, 19, 20ம் தேதிகளில் உற்சவவாரி திருவிழாவும், 4ம் நாள் (21ம் தேதி) அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். ஐந்து, ஆறு, ஏழாம் நாள் திருவிழாவில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சியும், 25ம் தேதி ஒன்பதாம் நாளன்று சுமார் 50 அடி நீளம் கொண்ட மூங்கிலை கட்டி சிறப்பு தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து 26ம் தேதி ஆராட்டு விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை உதவிகமிஷனர் ராதாகிருஷ்ணன் பிள்ளை, கமிட்டி தலைவர் கீதா சுகுணன், செயலாளர் பிஜிலால் பாலஸ், துணை செயலாளர் உதயகுமார் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

Tags : festival ,Auchankovil Ayyappan Temple ,Mahotsavam ,
× RELATED பெரியபாளையம் அருகே ஏகாத்தம்மன்...