×

வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு; கொப்பரை தேங்காய் விலை கடும் வீழ்ச்சி: கிலோ ரூ30க்கு விற்பதால் விவசாயிகள் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி: கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரியில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரை தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்து, கிலோ ₹30க்கு விற்பதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். தமிழகத்தில் பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவு தேங்காய் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளான காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், அரசம்பட்டி, பாரூர், மருதேரி மற்றும் போச்சம்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில், சுமார் 20 லட்சம் தென்னை மரங்கள் உள்ளது. இங்கு விளையும் தேங்காய், வெளி மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், வடமாநிலங்களுக்கும் அதிக அளவு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக தென்னை மரங்களில்  ஈரியோஃபைட் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால், தேங்காய் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. மேலும், நோய் தாக்குதல் காரணமாக, தேங்காய் சிறுத்து காணப்படுவதால், வெளி மார்க்கெட்டில் விலை குறைவு ஏற்பட்டது. போக்குவரத்து செலவு, உரிப்பு கூலி அதிகரித்த நிலையில், வியாபாரிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டு வந்தது. இதையடுத்து விவசாயிகளும், வியாபாரிகளும் தேங்காய்களை உடைத்து, காயவைத்து கொப்பரைகளாக வியாபாரம் செய்து வந்தனர். கொப்பரை தேங்காயை மாவட்டத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலையை சேர்ந்தவர்களும், ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் இருந்து வரும் வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கியதால், அதிபட்சமாக ஒரு கிலோ கொப்பரை ₹60 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கொப்பரை வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள எண்ணெய் ஆலை உரிமையாளர்கள், வெளிமாநில கொப்பரையை அதிக அளவு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரை விலை, கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட எண்ணெய் கம்பெனி மட்டும், தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து மட்டுமே கொப்பரையை கொள்முதல் செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பசவண்ணகோவில் பகுதியை சேர்ந்த விவசாயி தனுஷ்(எ)வேலு கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரையை, தனியார் எண்ணெய் ஆலை உரிமையாளர்கள், தங்களது விற்பனை பிரதிநிதிகளை கிராம பகுதிகளுக்கு நேரில் அனுப்பி, கொள்முதல் செய்து வந்தனர். இதனால் கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்தது. ஆனால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொப்பரை வரத்து அதிகரித்து உள்ளதால், தற்போது இங்குள்ள கொப்பரையை வாங்க, எண்ணெய் ஆலைகள் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால் ₹60க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கொப்பரை, படிப்படியாக விலை குறைந்து, தற்போது கிலோ ₹30க்கு கொள்முதல் செய்கின்றனர். தமிழக அரசு கொப்பரை கொள்முதல் நிலையத்தை துவங்கி, கொப்பரைக்கு  உரிய விலையை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்,’ என்றார்….

The post வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு; கொப்பரை தேங்காய் விலை கடும் வீழ்ச்சி: கிலோ ரூ30க்கு விற்பதால் விவசாயிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kopari ,Krishnagiri ,Kerala ,Andhra ,Karnataka ,
× RELATED மாயமான முதியவர் சடலமாக மீட்பு