×

முதலியார்குப்பம் படகு குழாமில் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் தனிதீவு மேம்படுத்தும் பணி: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

மதுராந்தகம்: முதலியார்குப்பம் படகு குழாமை ரூ 50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருவதை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே ஈசிஆர் சாலையையொட்டி பக்கிங்காம் கால்வாயில் முதலியார்குப்பம் படகு குழாம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறை மூலமாக படகுப் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது.  இந்தப் படகு குழாமிலிருந்து பக்கிங்காம் கால்வாயில் 5 கிலோமீட்டர் படகில் பயணம் செய்து ஐலண்ட் எனப்படும் தனித் தீவு வரை சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர். இதை சுற்றுலா வளர்ச்சி துறை மேம்படுத்த புதிய முயற்சிகளை செய்து வருகிறது.  மேலும்,  இந்தப் படகு குழாம் பகுதியில் உள்ள தனித் தீவில் சுற்றுலா வளர்ச்சி துறை மூலமாக ரூ50 லட்சம் செலவில்  தென்னங்கீற்று, ஈச்சம்பாய், கோரை பொருட்கள் ஆகியவை பயன்படுத்தி நிழல் குடை, உணவகம் வரவேற்பு அறை உள்ளிட்டவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த பணியினை சுற்றுலா வளர்ச்சி துறை அமைச்சர் மதிவேந்தன் பக்கிங்காம் கால்வாயில் ஸ்பீடு போட்டில் பயணம் செய்து தனித் தீவு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு நடத்தினார்.  இதனை தொடர்ந்து நிருபர்களிடம்  அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், ‘முதலாமாண்டு மானியக்கோரிக்கையிலேயே ரூ 50 லட்சம் ஒதுக்கீடு செய்து இந்த  படகு குழாமை மேம்படுத்த தனித்தீவில் நிழல் குடைகள் உணவகம் கட்டப்பட்டு வருகிறது.  இந்த பணிகளை ஆய்வு செய்தேன்  படகு குழாமில் வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீர் விளையாட்டுக்கள், சாகச விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார். இந்த ஆய்வின்போது,  சுற்றுலா வளர்ச்சித் துறை இயக்குனர் சந்திப் நந்தூரி உள்ளிட்ட சுற்றுலாத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்….

The post முதலியார்குப்பம் படகு குழாமில் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் தனிதீவு மேம்படுத்தும் பணி: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tani Island ,Mudaliarkuppam Ferry Terminal ,Madhuranthakam ,Tourism Minister ,Mathiventhan ,Mudaliarkuppam ,
× RELATED வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில்...