×

இலை கட்சி விவிஐபி மாஜி மந்திரிகளுக்கு கொடுத்துள்ள ரகசிய அசைன்மென்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம் விவிஐபியின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, அக்கட்சியின் நிர்வாகிகளே பேசிக்கிறாங்களே, அப்படி அவர் என்ன செய்துவிட்டார்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்ட மாஜி விவிஐபி, சமீபகாலமாக தொண்டர்களுடன் ரொம்பவே ஐக்கியமாக ஆரம்பிச்சிருக்காராம். சாப்பிட்டியா.. உடல் நலம் எப்படி இருக்கு, குடும்பத்தினரை கேட்டதாக சொல்லவும் என்று ரொம்பவே கீழே இறங்கி வந்து விசாரிக்கிறாராம். அதுவும் சொந்த ஊருக்கு வந்தால் காதுகுத்து, கல்யாணம், கிரகபிரவேசம் என்று எல்லா பங்ஷனுக்கும் கூப்பிட்டவுடன் போகிறாராம். அது மட்டுமில்லாமல், கிளை கழக நிர்வாகிகளிடமும் ஏகத்துக்கும் பாசம் காட்டுறாராம். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றால் கணிசமாக கரன்சியையும் கொடுக்கிறாராம். சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகளுக்கான எலக்‌ஷன் சமீபத்தில் நடந்துச்சாம். இதில் ஜெயிச்ச எல்லோருக்கும், நேரில் போய் சான்றிதழ் வழங்கினாராம் மூன்றெழுத்து தலைவர் காலத்திலயும், மம்மி காலத்திலயும் கூட, இப்படி நேரடியாக சான்றிதழ் வழங்கியதில்லையாம். ஆனால், தற்போது மாவட்ட பொறுப்பை நிழலானவருக்கு தாரை வார்த்த நிலையிலும், மாஜி நேரடியாக சான்றிதழ் வழங்கினாராம். இது பெரிய மாற்றமா இருக்கேன்னு எல்லோருக்கும் ஆச்சர்யமாம். அதுகுறித்து விசாரித்தபோது, ராயப்பேட்டையில் உள்ள இலை கட்சியின் தலைமை அலுவலகத்தில், வரும் 23ம் தேதி பொதுக்குழு நடக்குதாம். இதில் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிங்க, ஒற்றை தலைமை கோரிக்கை வைக்க முடிவு செஞ்சிருக்காங்க. இதுல முக்கிய விஷயமே, ேதனிக்காரருக்கு தெரியாமல் தனக்கு நெருக்கமான மாஜி மந்திரிகள் மூலம் காய்களை நகர்த்தி, பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை அனைவரும் முன்மொழிய வேண்டும். அதற்கு என்ன செலவாகுதோ அல்லது பதவி கேட்பவர்களுக்கு பதவியை கொடுக்கிறோம்னு தூது அனுப்பி இருக்கிறாராம். இது தேனிக்காரருக்கோ, சின்ன மம்மிக்கோ சாதகமா மாறிடக்கூடாது. ஒற்றை தலைமை அதுவும் தன் தலைமையில் தான் அமைய வேண்டும் என்ற கோஷம் பொதுக்குழுவுக்கு உள்ளேயும், வெளியேயும் ஒலிக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவாம். அதற்காக மாஜி மந்திரிகள் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்களாம். தாமரையும் இந்த பொதுக்குழுவில் உங்களில் ஒருவரின் தலைமையின் கீழ்தான் கட்சி வர ேவண்டும். அவர்களுக்கு தான் எங்கள் சப்போர்ட் என்று கூறிவிட்டதாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஊரையே காக்க வேண்டிய அலுவலகத்துக்கு அதிகாரியே இல்லையாமே. ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மதுராந்தகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் 2 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் இங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு தற்போது வரை இந்த காவல்நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லையாம். இந்த காவல் நிலைய கட்டுப்பாட்டில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் பல்வேறு சாலை விபத்துகளும் இந்த காவல் நிலையத்தில்தான் வழக்குகளாக பதியப்படுகின்றன. இதுபோன்ற முக்கிய காவல் நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யாமலிருப்பது எதற்கு என்று தெரியாமல் அந்த ஸ்டேஷனில் உள்ளவர்களே விழிபிதுங்கி நிற்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பணியில் இல்லாத பெண் ஊழியருக்கு சம்பளம் எப்படி கொடுக்கிறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் சிட்டியில காகிதம் பட்டறை என்ற ஊர் இருக்குது. இந்த ஊர்ல இருக்குற அங்கன்வாடி மையத்துல ஒரு பெண் பணிபுரிஞ்சு வந்தாங்களாம். இவங்க கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி உரிய அனுமதி இல்லாம வெளிநாட்டுக்கு போயிட்டாங்களாம். வௌிநாட்டுக்கு போனாலுமே அந்த பெண் ஊழியருக்கு மாதச்சம்பளம் சரியாக போகுதாம். பணியில் இல்லாத பெண்ணுக்கு சம்பளம் வழங்குற தகவல் தான் மாநகர்ல இப்ப பரபரப்பா பேசப்படுது. அதோட இந்த துறையில, அதிகாரிங்க, மாசத்துக்கு ஒரு தொகை கொடுத்தே ஆகவேண்டும்னு மைய பணியாளருங்க கிட்ட கெடுபுடி செய்றாங்களாம். இதனால மையத்துல இருக்குற குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளை சரிவர கொடுக்குறதில்லையாம். கொஞ்சமா செஞ்சி வச்சு, போட்டோ எடுத்து மட்டும் அனுப்பி கணக்கு காட்டுறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘குக்கர்ல ஏன் எது போட்டாலும் வேகவே மாட்டேங்குதாமே, என்ன பிரச்னை…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மெடல் மாவட்டத்தில் பட்டியில் முடிகிற ஊரில் சமீபத்தில் குக்கர் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தலைமைக்கழக நிர்வாகியான ராஜாவானவர் தொண்டர்கள் மத்தியில் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு பேசினாராம். தோழியையும், குக்கர் கட்சித் தலைவரையும் அந்த கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும். திரும்பவும் இவர்களை கட்சியில் சேர்த்து, ஒற்றை தலைமைக்கு கொண்டு வந்தால் மட்டுமே கட்சி உருப்படும் என்று பேசினாராம். கட்சி வளர்ச்சிக்கு ஆலோசனை கூற கூட்டி வந்தால், இலைக்கட்சியில் சேர்த்தால்தான் உருப்படலாம் என்கிறாரே.. திரும்பவும் அங்கே போறதுல யாருக்குமே விருப்பமில்லாதப்போ, இந்த பேச்சு தேவையா என்ற முணுமுணுப்புகளோடு நிர்வாகிகள் பலரும் கூட்டத்திலிருந்து பாதியிலேயே எழுந்து போய் விட்டனராம். தலைமை நிர்வாகியின் பருப்பு மெடல் மாவட்ட குக்கரில் வேகவில்லை என்று பேசிக் கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா….

The post இலை கட்சி விவிஐபி மாஜி மந்திரிகளுக்கு கொடுத்துள்ள ரகசிய அசைன்மென்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf Party ,VVIP ,Maji ,wiki Yananda ,Salem ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...