×

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்ட 300 விசைப் படகுகள்

தண்டையார்பேட்டை: தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் முடிந்ததை தொடர்ந்து, நேற்றிரவு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நடுக்கடலில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றன. தமிழகத்தின் அனைத்து கடற்கரை பகுதிகளிலும் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக, ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சிறிய பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்களை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று காலை முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப் படகுகளில் ஐஸ் கட்டிகள், வலைகள், மளிகை பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் மீனவர்கள் தயார்நிலையில் வைத்தனர்.இந்த நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றிரவு 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க கிளம்பி சென்றன. இதில் ஒருசில விசைப் படகுகள் இன்று காலை மீன்பிடித்து கரைக்கு திரும்பின. எனினும், இன்று மீனவர்கள் எதிர்பார்த்த அளவு போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்களும் மீன் வாங்க வந்தவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.இதுகுறித்து காசிமேடு மீனவர்கள் கூறுகையில், ‘’ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்திருந்தால், நாங்கள் எதிர்பார்த்த அளவு வஞ்சிரம், வவ்வால், கொடுவா, சங்கரா, இறால், கடமா, நண்டு உள்பட ஏராளமான மீன்வகைகள் கிடைத்திருக்கும். எனினும், நாங்கள் குறிப்பிட்ட தூரத்துக்கு சென்று திரும்பியதால் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப் படகுகள், இன்னும் ஓரிரு நாட்களில் கரை திரும்பிவிடும். இதில் எதிர்பார்த்த அளவு ஏராளமான மீன்கள் கிடைக்கும் என நம்புகிறோம்’ என்றனர்….

The post காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்ட 300 விசைப் படகுகள் appeared first on Dinakaran.

Tags : Casimedu ,Kandadarpet ,Tamil Nadu ,Kasimedu Fishing ,Port ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...