×

பழநி, குன்றத்தில் சூரசம்ஹாரம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பழநி: பழநி, திருப்பரங்குன்றத்தில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்திய நிகழ்ச்சி, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கு மலைக்கோயிலில் சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம் புரிவதற்காக, மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்த பின்பு சன்னதி நடை அடைக்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக வீரபாகு மற்றும் நவவீரர்கள் சூரனிடம் சமரசம் பேசும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க, சின்னக்குமார சுவாமி, தாரகாசூரனை வதம் செய்தார். தொடர்ந்து கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதம், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதம், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடந்தது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்பி உதயகுமார், பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் பழனிவேல் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று நடக்கிறது.

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம், சன்னதி தெருவில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் சுவாமி மயில் வாகனத்தில் நான்கு வீதிகளை வலம் வந்து சன்னதி தெருவில் சூரனை வதம் செய்யும் லீலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 8 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது. சோலைமலை:மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் நேற்று மாலை தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

Tags : Sundaysham ,hill ,devotees ,
× RELATED கடும் குளிர், மழையிலும் வெள்ளிங்கிரி மலையில் பக்தர்கள் குவிந்தனர்