×

காங்., கூட்டணியை கலைக்க பிரதமர் மோடி சதி திட்டம்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: புதுச்சேரி வருமான வரித்துறை முன்பு மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகு முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.  அது சுதந்திரத்துக்கு பிறகும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் 2010ம் ஆண்டில் நஷ்டத்தில் இயங்கியது. அதற்கு ரூ.90 கோடியை காங்கிரஸ் கொடுத்தது. யங் இந்தியா என்ற நிறுவனத்தை உருவாக்கிய சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் பங்குகளுக்கு எந்தவித பணமும் கொடுக்காமல் பத்திரிக்கை நடத்த உதவினார்கள். இந்த யங் இந்தியா அமைப்பானது லாபத்தில் இயங்கும் அமைப்பு அல்ல. அது ஒரு சமுக அமைப்பாகும். எந்தவித பணப்பரிமாற்றமும் இல்லா சூழலில் 2015ம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது சுப்ரமணிய சுவாமி பொய் குற்றச்சாட்டுக்களை கூறி மனு தாக்கல் செய்தார். அதாவது, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விற்கப் பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை கூறினார். அதை அமலாக்கத்துறை விசாரணை செய்து வழக்கை ரத்து செய்துவிட்டது. அதன்பிறகு 2022ல் மீண்டும் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு பழிவாங்கும் செயலாகும். பல மாநிலங்களில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு அரசியலில் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறையை தன் பக்கம் வைத்துக் கொண்டு மிரட்டி வருகிறது. இதன் ஒரு அங்கமாகத்தான் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது எந்தவிதமான பழியும் சுமத்த முடியாது என்ற சூழல் நிலையில் இந்த வழக்கை கையில் எடுத்துக் கொண்டு பொய் வழக்கு போட்டு அவர்களுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. சுப்ரமணிய சுவாமி கொடுத்த மனு தள்ளுபடி ஆன பிறகும் மறுபடியும் விசாரணை என்ற போர்வையில் மோடி செய்வது அவருடைய காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. இந்த வழக்கு விரைவில் தள்ளுபடி ஆகும். மோடியின் முகத்திரை கிழியும். 2024ல் அனைத்து கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. இப்போது கூட குடியரசு தலைவர் தேர்தலில் கூட்டணி கட்சிகள் இணைந்து ஒரு பொது வேட்பாளரை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கிறது. அதற்கு பயந்து காங்கிரஸ் தலைவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறினால் இந்த கூட்டணி அமையாது என்று பிரதமர் மோடி சதி திட்டம் தீட்டியுள்ளார்.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உண்மையான முதல்வராக செயல்படவில்லை. டம்மி முதல்வராக இருக்கிறார். கவர்னர் தமிழிசைதான் சூப்பர் முதல்வராக செயல்படுகிறார். அவர்தான் எல்லா முடியும் எடுக்கிறார். முதல்வர் வாயை திறப்பதே இல்ல. புதுவையில் ஐந்து முதல்வர் இருக்கிறார்கள். அதாவது, கவர்னர் தமிழிசை சூப்பர் முதல்வர். ரங்கசாமி டம்மி முதல்வர். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணன்குமார் ஆகியோரும் முதல்வர் வேட்பாளராக இருக்கிறார்கள். முதல்வர் ரங்கசாமி தன்னுடைய அதிகாரத்தை செலுத்தாத காரணத்தால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post காங்., கூட்டணியை கலைக்க பிரதமர் மோடி சதி திட்டம்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chief Minister ,Narayanasamy Obesam Puducherry ,Puducherry Income Taxation Department ,Central Bagha Government ,Congress ,PM Modi ,Former ,Narayanasamy Obsession ,Dinakaran ,
× RELATED கலவரம் செய்ய யாரையாவது கடவுள் அனுப்புவாரா?: பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி