×

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம்

கோவில்பட்டி: கோவில்பட்டி  செண்பகவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத  சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு சமுதாய  மண்டகபடிதாரர்கள் சார்பில் காலை,  இரவு பல்வேறு  வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடந்தது.

கடந்த 1ம் தேதி வணிக வைசிய சங்க  மண்டகபடிதாரர்கள் சார்பில் தேரோட்டம் நடந்தது. இந்நிலையில் விழாவின் சிகரமான திருக்கல்யாண வைபவம் நேற்று (4ம் தேதி) விமரிசையாக நடந்தது. இதையாட்டி  நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு முடுக்குமீண்டான்பட்டி ஆவுடையப்பன்  செட்டியார் குடும்பத்தினர் மண்டகபடிதாரர் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு  திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. பூஜைகளை செண்பகராமன், சுவாமிநாதன், கோபாலகிருஷ்ணன், சங்கர் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் முன்னின்று நடத்தினர்.

இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அவரது மனைவி இந்திராகாந்தி, அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன் மற்றும் திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமியும், பல்லக்கில் அம்பாளும் பட்டணபிரவேசம் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தையொட்டி கோயில் முன்புறம் உள்ள பிராமண மகாசபை காயத்ரி மண்டபத்தில் அன்னதானம்  நடந்தது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் செய்திருந்தனர்.

Tags : Aipasi ceremony ,Kovilpatti Shenbagavalliyamman ,
× RELATED கொரோனா பரவல் அதிகரிப்பால் அரசு புதிய...