×

வாலிகண்டபுரத்தில் சேத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

பெரம்பலூர்: வாலிகண்டபுரம் சேத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை யொட்டி நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்திலுள்ள சேத்து மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் செவ்வாயன்று காப்பு  கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதியுலா நடந்து வந்தது. கடந்த 28ம் தேதி குதிரை வாகனத்தில் வீதியுலாவும்,  கரகாட்டமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று நேர்த்திக் கடன் மற்றும் வேண்டுதல் நிறைவேறியதற்காகவும் பக்தர்கள் அலகுகுத்தி ஊர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

இதனைத் தொடர்ந்து மாலை 4மணிக்கு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர் 6 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. இதில் வாலிகண்டபுரம், வல்லாபுரம், பிரம்மதேசம், சாலை, மேட்டுப்பாளையம், சாத்தனவாடி, அனுக்கூர், அனுக்கூர்குடிகாடு, சிறுகுடல்,  கீழப்புலியூர், தண்ணீர்ப் பந்தல், பெரம்பலூர், தேவையூர், மங்கலமேடு உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

Tags : Sethu Mariamman Temple Thevilkollam ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்