×

நிழல் ராஜ்ஜியம்: தென் ஆப்ரிக்காவில் அதிபரையும் மிஞ்சிய குப்தா சகோதரர்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரனாக வேண்டும் என்ற கனவு எப்போதும் உண்டு. இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களும், உலக பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒவ்வொருவரும் சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு, படிப்படியாக தங்களது தொழிலை விரிவாக்கம் செய்து இன்று பில்லியனர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்காரர்களும் புருவத்தை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த குப்தா சகோதரர்கள், ஒரு நாட்டையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, அங்குள்ள அதிபர் முதல் அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைத்து ரூ60 லட்சம் கோடி வரை சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். உபி.யில் பிறந்த குப்தா சகோதரர்கள் பின்னர் நாட்டை விட்டு வெளியேறி தென் ஆப்ரிக்காவில் தஞ்சம் புகுந்து சுமார் 29 ஆண்டுகளில், உலக பணக்காரர்களே ஆச்சரியப்படும் வகையில் கனவில் காணாத வாழ்க்கையை வாழ்ந்து உள்ளனர். இந்த குப்தா சகோதரர்களின் உலக மகா கோடீஸ்வர வாழ்க்கையால் ஒரு நாட்டின் அதிபர் சிறைக்கு சென்றது எப்படி? அதிபரின் குடும்பத்தினர் குப்தா சகோதரர்கள் நிறுவனத்தில் வேலை செய்தது ஏன்? ஒரு கலவரம் ஏற்பட்டு ஏராளமானோர் கொல்லப்பட்டு இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? என பல கேள்விகள் எழுகிறது. ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றிய இந்த குப்தா சகோதரர்கள் யார்? விவரம் இதோ…ஆப்ரிக்கா நாடுகள் என்றால் போதை பொருள் கடத்தல், வைர வியாபாரம் போன்ற தொழில்களுக்கு பெயர் போன்றது. ஆனால், குப்தா சகோதரர்கள் தென் ஆப்ரிக்காவில் செருப்பு தொழில் தொடங்கி நாட்டில் உள்ள அனைத்து வளங்களிலும் கால் பதித்து பணம் மழையில் உல்லாச வாழ்க்கை நடத்தி உள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அஜய் குப்தா, அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா. இந்த 3 சகோதரர்கள் 1993ம் ஆண்டு பிழைப்புக்காக தென் ஆப்ரிக்காவுக்கு  சென்றனர். அப்போது, தென் ஆப்ரிக்காவில் இனவெறி கொடுமை வீழ்ச்சி  கண்டிருந்தது. இதனால், முதன் முதலில் காரில் செருப்பு விற்க தொடங்கினர். அதன் பின்  ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை மூவரும் சேர்ந்து தொடங்கினர். இதுதான், அவர்களின் மெகா ஊழலுக்கான முதல்படி.  கம்ப்யூட்டர் நிறுவனம்…தென் ஆப்ரிக்காவில் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் தொடங்க போதுமான விதிமுறைகள் இல்லை. பின்னர்  பத்தாயிரம் பேரை பணி நியமனம் செய்யும் அளவிற்கு இந்த நிறுவனம் வளர்ந்தது.  தொடர்ந்து, நிதியமைச்சகம், இயற்கை வளம், பொது  நிறுவனங்கள், வரி வசூலிக்கும் முகமைகள், தொலைத்தொடர்புகள், தேசிய ஊடகமான  எஸ்ஏபிசி, விமான சேவை, ரயில், துறைமுகம், பைப்லைன், சுரங்கம், கணினி,  எரிசக்தி என நாட்டின் பெரும்பாலான துறைகளில், ஒவ்வொன்றாக குப்தா  சகோதரர்கள்  காலெடுத்து வைத்தனர். இதன் மூலம், கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தனர். இந்த  வர்த்தக்கத்தின் போது டிரம்ப் கார்டாக சிக்கியவர்தான் ஜேக்கப்  சூமா. குப்தா சகோதரர்களுக்கு இவர் அறிமுகம் கிடைக்கும்போது அவர் தென் ஆப்ரிக்காவின் அதிபராக  இல்லை. ஆனால், அவருடனான நட்பை ஆழப்படுத்தி கொண்ட குப்தா சகோதரர்கள் பல்வேறு  ஒப்பந்தங்களை எடுத்ததன் மூலம் ஒட்டு மொத்த அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர். அப்போது, லாபமிக்க அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கும், அதிகாரமிக்க அரசு பதவிகளின்  நியமனங்களில் தலையிடவும் லஞ்சம் வழங்கியதாக குப்தா சகோதரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. சூமாவுடன் நெருக்கம் 2009ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா அதிபராக ஜேக்கப் சூமா பதவியேற்று கொண்டார். இதன்பின், குப்தா சகோதரர்கள் அதிபரையே மிஞ்சும் அளவுக்கு தனி ராஜ்ஜியத்தை நடத்த தொடங்கினர். 2009-2018ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்காவின் நிழல் அரசாகவே குப்தா சகோதரர்கள் செயல்பட்டனர். அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் நியமனம் வரை, பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் முதல் தனியார் ஒப்பந்தங்கள் வரை அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தனர். தென் ஆப்ரிக்கா அரசின் அனைத்து மட்டங்களிலும் குப்தா சகோதரர்கள் அதிகாரம் செலுத்தினர். இதன் மூலம் அதிபர் ஜேக்கப் சூமாவின் குடும்பத்தினருடன் குப்தா சகோதரர்கள் நெருக்கமானார்கள். உருவான சாம்ராஜ்ஜியம் இந்த உறவின் காரணமாக, குப்தா சகோதரர்களுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் அதிபர் ஜேக்கப் சூமாவின் மனைவிகளில் ஒருவர், ஒரு மகன், மகள் ஆகியோர் உயர் பதவிகளில் இருந்தனர். அரசு துறைகளுடனான லாபகரமான ஒப்பந்தங்கள் மூலம் குப்தா குடும்பத்தினருக்கு சொந்தமான பல நிறுவனங்கள் பயனடைந்தன. அரசு அதிகாரத்தில் புகுந்து தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து, பல நிதி மோசடியில் குப்தா சகோதரர்கள் ஈடுபட்டனர். தென் ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வந்த பாராஸ்டாட்டல் நிறுவனங்களில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை கையாடல் செய்தனர். தென் ஆப்பிரிக்காவின் வறுமை, ஊழல், லஞ்சம் ஆகியவற்றை ஆயுதமாக பயன்படுத்தி அதிகாரத்தின் ஓட்டை பிடித்து சாம்ராஜ்ஜியம் நடத்தி உள்ளனர். அதிகார மிரட்டல்அதிபர் உத்தரவின்பேரில் செயல்பட்ட தென் ஆப்ரிக்கா அரசு போய், அதிபர்  ஜேக்கப் சூமா என்ன செய்ய வேண்டும் என்று குப்தா சகோதரர்கள் உத்தரவு போடும்  நிலை வந்தது. குப்தா சகோதரர்கள் என்ன செய்ய வேண்டும் சொல்கிறாரோ அதை அப்படி  அதிபர் ஜேக்கப் சூமா செய்யும் நிலை உருவானது. ஒரு கட்டத்தில் குப்தா குடும்பத்தினரின் நிறுவனங்கள் நலன் சார்ந்த பல்வேறு ஆணைகள் அதிகாரிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டன. இதற்கு ஒத்துப் போனால் பரிசாக பணம் மற்றும் பதவி உயர்வு அல்லது பதவியிலிருந்து நீக்கம். அரசு அதிகாரங்களில் தலையிடுவது, பதவிகளை நிரப்புவதற்கு லஞ்சம் பெறுவது  உள்ளிட்ட சட்ட விரோதமான செயல்களில் குப்தா சகோதரர்கள் ஈடுபட்டனர். அப்போது  அதிபராக இருந்த ஜேக்கப் சூமா நெருக்கமாக இருந்ததால், இதைக் கண்டு  கொள்ளவில்லை. இதனால், குப்தா சகோதரர்களின் அட்டூழியங்கள் கொடிக்கட்டி பறந்தது.  நியமிக்கும் அதிகாரம் தென் ஆப்ரிக்காவில் கேபினட் அமைச்சரவையில் யார் இடம் பெறலாம்  என்பது வரை தீர்மானிக்கும் சக்தி குப்தா சகோதரர்களுக்கு இருந்தது. பொது  நிறுவனங்கள் துறை அமைச்சர் பதவியில்  வித்ஜெ மென்டாரை நியமித்தது, அப்போதைய நிதியமைச்சர் நிநி என்பவரை அப்பதவியில் இருந்து நீக்கி அவருக்குப் பதிலாக டெஸ்  வான் ரூயனை நிதியமைச்சர் ஆக்கியதில் குப்தா சகோதரர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. தென் ஆப்ரிக்கா ஏர்வேஸ் நிறுவனம் இந்திய வழித்தடத்தை விட்டுக்  கொடுக்க வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது, 2017ம் ஆண்டு வ்ரெடே பண்ணை திட்டம்  தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குப்தா  குடும்பம் மீது சுமத்தப்பட்டது. ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் குப்தா சகோதரர்கள் மறுத்தனர். ஆனால், குப்தா சகோதரர்கள், அதிபர் ஜேக்கப் சூமா இடையே உறவு குறித்து பல்வேறு ஹேக்  செய்யப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்தது.மலைக்க வைக்கும் சொத்து 2016ம் ஆண்டின் படி குப்தா சகோதரர்களின் சொத்து மதிப்பு ரூ60 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டது. அதிபரின் நெருக்கம், அரசு நிர்வாக தலையீடு காரணமாக ரூ2.48 லட்சம் கோடி வரை ஊழல் செய்துள்ளதாக குப்தா சகோதரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. குப்தா சகோதரர்களின் அட்டூழியம் அரசாங்கத்தில் கொடி கட்டிப் பறந்ததால், கடந்த 2017ம் ஆண்டு முதல் போராட்டங்களும், எதிர்ப்புகளும் தொடங்கியது. குப்தா சகோதரர்கள் செய்த ஊழல், ஜேக்கப் சூமாவின் ஆதரவு உள்ளிட்டவற்றுக்கான ஆதாரங்கள் வெளியானதால், தேர்தலில் தென் ஆப்ரிக்க காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தலைமறைவான குப்தா தேர்தல் முடியும் முன்பே தென் ஆப்ரிக்காவில் வைத்திருந்த பணம் முழுவதையும் எடுத்துக் கொண்டு, குப்தா சகோதரர்கள் துபாய்க்கு தப்பிச் சென்றனர். இதனால், அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.  இதையடுத்து, அதிபர் பதவியை ஜேக்கப் சூமா ராஜினாமா செய்தார். அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவில் நடந்த போராட்டம்  கலவரமாக மாறி இந்தியர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. ஏராளமானோர்  கொல்லப்பட்டனர். இன்டர்போல் வேட்டை அதிபரையே கம்பி எண்ண வைத்த குப்தா சகோதரர்கள் துபாயில் தலைமறைவாக இருப்பதை அறிந்து தென் ஆப்ரிக்கா அரசும் இன்டர்போல் உதவியுடன் பிடிக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி, தென் ஆப்ரிக்கா போலீசார், இன்டர்போல் போலீசின் உதவியை நாடினர். பின்னர், குப்தா சகோதரர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பின்னர், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் விசா தடை தொடங்கி சொத்து முடக்கம் வரை பல நடவடிக்கைகளை  எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், தென் ஆப்ரிக்காவுக்கும் இடையே கைதிகளை  பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் இல்லாததால், குப்தா சகோதரர்களை ஒப்படைக்க  யுஏஇ அரசு மறுத்துவிட்டது. இது தொடர்பாக ஐ.நா.வில் தென் ஆப்ரிக்க அரசு முறையிட்டது. அதன்பின் 2021ம் ஆண்டு துபாய் அரசுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் தென் ஆப்ரிக்கா அரசு கையெழுத்திட்டது. ஓராண்டு போராட்டம் சுமார் ஓராண்டு போராட்டத்துக்கு பின் கடந்த சில தினங்களுக்கு முன் குப்தா சகோதரர்களை துபாய் போலீஸ் கைது செய்தது. அவர்களை தென் ஆப்ரிக்கா அழைத்து வரும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், அஜய் குப்தா மட்டும் கைது செய்யப்படவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. நாட்டையே பெரும் ஊழலுக்கு தள்ளிவிட்டு தலைமறைவான குப்தா சகோதரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று தென்  ஆப்ரிக்கா அரசு திட்டவட்டமாக உள்ளது. ஏழைகள், ஏழைகளாக இருக்க மாட்டார்கள்… கோடீஸ்வரர்கள், கோடீஸ்வரர்களாகவே இருக்க மாட்டார்கள் என்பதற்கு குப்தா சகோதரர்களின் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும். மரண தண்டனையே கொடுத்து இருக்கலாம் ஜேக்கப் சூமா மீது பாலியல் குற்றச்சாட்டுகள், பண மோசடி, ஊழல் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனால், சூமா மீது விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. குப்தா சகோதரர்கள் வழிகாட்டுதலில் அரசை நடத்தியதையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், ஜேக்கப் சூமாவுக்கு 15 மாத சிறை தண்டனை 2021ம் ஆண்டு வழங்கப்பட்டது. 80 வயதாகும் ஜேக்கப் சூமா, ‘இந்த வயதில் எனக்கு இந்த தண்டனை கொடுப்பதற்கு பதில் மரண தண்டனை கொடுத்து விடலாம்’ என்று தெரிவித்தார். தண்டனை வழங்கப்பட்ட இரு மாதங்களுக்கு பின் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.*கொல்லப்பட்ட இந்தியர்கள் சூறையாடப்பட்ட சொத்துகள்ஊழல் வழக்கில் 2021ம் ஆண்டு ஜேக்கப் சூமா கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கு போட்டியாக ஆளும் கட்சியினரும் வன்முறையில் இறங்கினர். ஜேக்கப் சூமா அதிபராக பதவி வகித்தபோது, இந்தியர்களுக்கு நாட்டை தாரை வார்த்து விட்டார் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 72 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 1,200 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியர்கள் நடத்தும் கடைகள், வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. அவர்களின் பணம், பொருட்கள் சூறையாடப்பட்டன. இந்திய வம்சாவளியினருக்கு ரூ512 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தென் ஆப்ரிக்காவில் இந்திய வம்சாவளியினர் 4 சதவீதம் பேர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்டர் கிளாப் ஏர் பேசில் நடந்த  மகளின் திருமணம் 2013ம் ஆண்டு குப்தா சகோதரர்கள் தங்கள் சகோதரி மகளின் திருமணத்திற்கு  பிரிட்டோரியா என்கிற பகுதிக்கு அருகிலுள்ள வாட்டர் கிளாப் விமானப்படை தளத்தை தனி மனித பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இது  அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜ  ரீதியிலான வெளிநாட்டு அதிகாரிகள், நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள் போன்ற மிக  உயரிய வெளிநாட்டு விருந்தினர்கள் வந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும் அந்த  விமான தளம், ஜேக்கப் சூமாவின் நண்பர் என்கிற ஒரே காரணத்தால் குப்தா  சகோதரர்களுக்குக் கொடுக்கப்பட்டது பலராலும் வெளிப்படையாகக்  கண்டிக்கப்பட்டது.சுப்தாஸ்’ ஆன சூமா, குப்தாஜேக்கப் சூமா மற்றும் குப்தா சகோதரர்களின் குடும்பங்கள் இணைந்து பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு மெகா முறைகேடுகளில் ஈடுபட்டது, அந்நாட்டு மக்களை கடும்  அதிருப்திக்கு உள்ளாக்கியது. எனவே, ஜேக்கப் சூமா என்கிற பெயரிலிருந்து ‘சு ’ என்கிற எழுத்தையும், குப்தா சகோதரர்களின் பெயரில் இருக்கும் ‘ப்தா’  இணைத்து ‘சுப்தாஸ்’ என மக்கள் அழைக்கத் தொடங்கினர். இந்தியாவிலும் மோசடியா? குப்தா சகோதரர்கள், ஜேக்கப் சூமாவுடன் நெருக்கமான நட்பு வைத்திருந்ததார். இதன் மூலம் குப்தா சகோதரர்கள் இந்தியாவில் பணமோசடி  செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 2018ம் ஆண்டு  டெல்லியில் அமைந்துள்ள அவர்கள் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் வருமான  வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். …

The post நிழல் ராஜ்ஜியம்: தென் ஆப்ரிக்காவில் அதிபரையும் மிஞ்சிய குப்தா சகோதரர்கள் appeared first on Dinakaran.

Tags : Kingdom of Shadow ,Gupta ,South Africa ,India ,Shadow Kingdom ,Dinakaran ,
× RELATED இந்திய பெருங்கடலில்...