×

தாமிரபரணி மகா புஷ்கர விழா : வாழவல்லான் கங்கா தீர்த்த கட்டத்தில் சிறப்பு வழிபாடு

ஏரல்: தாமிரபரணி மகா புஷ்கரம் 11வது நாள் விழாவையொட்டி ஏரல் அருகேயுள்ள வாழவல்லான் கங்கா தீர்த்த கட்டத்தில் பெருங்குளம் செங்கோல் மடம் ஆதீனம் நதியில் மலர் தூவி, சிறப்பு வழிபாடு நடத்தினார். 144 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஏரல் சேர்மன் கோயில் ஞான தீர்த்தம் படித்துறை, சிறுத்தொண்டநல்லூர் ஊர் மக்கள் சார்பில் ஏற்பாடு செய்துள்ள ஏரல் சுந்தவிநாயகர் கோயில் ஞான தீர்த்தம் படித்துறை, மங்கலகுறிச்சி தடுப்பணை, வாழவல்லான் கங்கா தீர்த்தக் கட்டம் மற்றும் உமரிக்காடு தீர்த்தகட்டப்பகுதிகளில் கடந்த 12ம் தேதி கணபதி ஹோமம், மற்றும் கோ பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தீர்த்த கட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் வாழவல்லான் கங்கா தீர்த்த கடடத்தில் நேற்று 11வது நாள் விழாவையொட்டி பெருங்குளம் செங்கோல்மடம் ஆதீனம் வருகை தந்து கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜை நடத்தினார். தொடர்ந்து அவர் நதியில் மலர் தூவி அபிஷேகம் நடத்தினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் செல்வகணேசன், இளந்துழகன், பச்சைப்பெருமாள், துரை, மணிராஜ், சங்கரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஏரல் சேர்மன் கோயில் ஞான தீர்த்தக் கட்டத்தில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு புனித நீராடினர். மாலையில் கோயில் பரம்பரை அக்தாரும், தாமிரபரணி மகா புஷ்கர விழா கமிட்டி தலைவருமான கருத்தப்பாண்டிய நாடார் தலைமையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நதிநீருக்கு தீபாராதனை காண்பித்து வழிப்பட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் சிறுத்தொண்டநல்லூர் ஊர்மக்கள் ஏற்பாடு செய்துள்ள ஏரல் சுந்தரவிநாயகர் கோயில் ஞான தீர்த்தக்கட்டத்திலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

Tags : Thamirabarani Maha Pushkara Festival: Special Worship ,
× RELATED காமதகனமூர்த்தி