×

நிகழ்ச்சிக்கு வராமல் பிரபு தேவா எஸ்கேப்: வெயிலில் பல மணி நேரம் காக்க வைத்ததால் சிறுவர், சிறுமிகள் மயக்கம்: ரூ.2,000 கட்டணம் வசூலித்துவிட்டு உணவுகூட தராத கொடூரம்

சென்னை: பிரபுதேவா நிகழ்ச்சி என்று அழைத்து வரப்பட்ட சிறுவர், சிறுமிகளை வெயிலில் பல மணி நேரம் காக்க வைத்ததால் அவர்கள் மயக்கம் அடைந்தனர். வி.எஸ் ராக்ஸ் என்ற அமைப்பின் சார்பாக சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு நமது மாஸ்டர் நமது முன்னாடி என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி நடன இயக்குனர் பிரபு தேவாவிற்கு அர்ப்பணிக்கும் விதமாகவும், அவரது 100 பாடல்களுக்கு 5000க்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் மற்றும் நடன கலைஞர்கள் தொடர்ந்து நடனமாடி உலக சாதனை படைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

100 பாடல்களுக்கு தொடர்ந்து நடனம் ஆடும் பட்சத்தில் இது கின்னசில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆசை வார்த்தை கூறி, சிறுவர், சிறுமிகளை அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அத்துடன் பிரபு தேவா இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என தெரிவித்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு சிறுவர், சிறுமியிடமும் ரூ.2 ஆயிரம் கட்டணமாக கேட்டுள்ளனர். பிரபு தேவா முன்பு நடனமாடப் போகிறோம் என்ற ஆசையிலும் கின்னசில் இடம்பெறுவோம் என்ற ஆர்வத்திலும் சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் வற்புறுத்தி 2 ஆயிரம் ரூபாயை வாங்கி கட்டணத் தொகையாக செலுத்தியுள்ளனர்.

சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடுமையான வெயில் நிலவுவதால், நேற்று காலை 6 மணிக்கு நிகழ்ச்சியை தொடங்கி 7.30 மணிக்குள் முடிக்கப்படும் என வி.எஸ்.ராக்ஸ் அமைப்பினர் சிறுவர்களின் பெற்றோரிடம் உறுதி கூறியிருந்தனர். இதை நம்பி, அதிகாலை 3 மணிக்கெல்லாம் குழந்தைகளை எழுப்பி, அவர்களை தயார் செய்து அதிகாலை 5 மணிக்குள்ளாக ஸ்டேடியத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால், திட்டமிட்டபடி 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கவில்லை.

இதோ தொடங்குவோம், இன்னும் 15 நிமிடங்களில் தொடங்கிவிடுவோம் என்றே பெற்றோர்கள் கேட்டபோது வி.எஸ் ராக்ஸ் அமைப்பினர் மழுப்பலாக பதில் கூறி வந்திருக்கிறார்கள். காலை 8 மணிக்கே வெயிலின் உக்கிரம் தொடங்கிவிட்டது. இதனால் சிறுவர், சிறுமிகள் பசியால் தள்ளாட ஆரம்பித்தனர். 2 ஆயிரம் ரூபாய் வாங்கியதால் காலை உணவு தருவார்கள் என நம்பியிருந்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. காலை உணவெல்லாம் தருவதில்லை என நிகழ்ச்சி அமைப்பினர் கூறியிருக்கிறார்கள். வெறும் தண்ணீரை மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

காலை 9 மணியாகியும் நிகழ்ச்சி தொடங்கவில்லை. கடும் வெயிலில் வெட்டவெளி மைதானத்தில் இருந்த சிறுவர், சிறுமிகள் மயக்கம் போட ஆரம்பித்துவிட்டனர். இதைப் பார்த்த பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். உடனே தங்களது குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடினர். அப்போது சிலர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போதுதான் பெற்றோர்களுக்கு பிரபு தேவா நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்பது தெரிந்தது. அதனாலேயே நிகழ்ச்சியை தாமதித்தீர்களா என நியாயம் கேட்டனர். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒழுங்காக பதில் கூறவில்லை. இதையடுத்து அதிகாலை முதல் காத்திருந்த சிறுவர், சிறுமிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்து அங்கிருந்து சென்றனர். பிறகு நடனக் கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதன் பிறகு வீடியோவில் பேசிய பிரபுதேவா, ஐதராபாத்தில் இருப்பதால் தன்னால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை எனக் கூறி மன்னிப்பு கேட்டார். இந்நிகழ்ச்சியால் சிறுவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டதுடன் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அதனால் வசூலித்த தொகையை வி.எஸ் ராக்ஸ் அமைப்பினர் திரும்ப அளிக்க வேண்டும், அவர்கள் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பெற்றோர்கள் கோருகின்றனர். இந்த சம்பவத்தால் எழும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post நிகழ்ச்சிக்கு வராமல் பிரபு தேவா எஸ்கேப்: வெயிலில் பல மணி நேரம் காக்க வைத்ததால் சிறுவர், சிறுமிகள் மயக்கம்: ரூ.2,000 கட்டணம் வசூலித்துவிட்டு உணவுகூட தராத கொடூரம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhu Deva ,CHENNAI ,VS Rocks ,International Dance Day ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...