×

வெளிநாடு செல்ல, மனக்குறைகள் தீர சந்திர பகவான் வழிபாடு!!!


பெரும்பாலான மக்கள் அதிக பணம் ஒருவரிடம் இருந்தால் அவர்கள் எல்லாவிதங்களிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என கருதுகின்றனர். ஆனால் ஒருவர் உலகின் எல்லா விதமான செல்வங்களையும் பெற்றிருந்தாலும் அவர் மன அமைதி மற்றும் மன நிம்மதி கொண்டு இருக்கிறார் என்பதை நிச்சயமாக கூற இயலாது. ஒருவருக்கு மன நிம்மதி இல்லையென்றால் எவ்வளவு செல்வங்கள், வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவை அனைத்தும் வீண். மேலும் பலர் மனதில் வீண் கவலைகள், சஞ்சலங்கள், பிறர் மீது கோபம், தன்னம்பிக்கையின்மை போன்ற மனம் சம்பந்தமான பல பிரச்சினைகளோடு வாழ்கின்றனர். மனிதர்களுக்குரிய மனதை ஆளும் கிரகமாக சந்திர பகவான் இருக்கிறார். மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் தீர சந்திர பகவானை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

நவகிரகங்களில் மனோகரன் ஆகிய சந்திர பகவானுக்கு உரிய தினமாக திங்கட்கிழமைகள் இருக்கின்றன. இந்த திங்கட் கிழமைகளில் காலை 6 இலிருந்து 7.30 மணி உள்ளான நேரம் சந்திர பகவானுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்யவும், சந்திர மந்திரம் ஜெபித்து வழிபடுவதற்கும் ஏற்ற நேரமாக இருக்கிறது. மேலும் இந்த நேரத்தில் சந்திரனின் அம்சம் நிறைந்த அம்பிகை வழிபாடு செய்வதன் மூலம் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற சந்திரனுக்குரிய நட்சத்திர தினங்களில் சந்திர பிரீத்தி எனப்படும் சந்திர பகவானுக்குரிய அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள், பூஜைகள், தீப வழிபாடுகள் செய்வதால் சந்திர பகவானின் மிகுதியான அருட்கடாட்சம் நமக்கு உண்டாகும். சந்திர பகவான் நீர் என்னும் பஞ்ச பூதத்திற்கு காரகத்துவம் வகிக்கும் கிரகமாக இருக்கிறார். எனவே ஒவ்வொரு முறை சந்திர பகவானுக்குரிய பூஜைகள் செய்யும்போது உங்களின் பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் தீர்த்தத்தில் சந்திர பகவானை ஆவாகனம் (தியானித்தல்) செய்து, அந்நீரை உங்களின் முகத்திலும் தலையிலும் தெளித்துக்கொள்வதால் மன ஒருமைப்பாடு மற்றும் மன நிம்மதி ஆகியவை ஏற்படும்.

சந்திர பகவானுக்கு மேற்கூறிய பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்பவர்களுக்கு மனக்கவலைகள், மன சஞ்சலங்கள் நீங்கும். பிறருடன் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதை குறைத்து, மன அமைதியை உண்டாக்கும். ஆழ்ந்த தூக்கமின்றி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல உறக்கம் உண்டாகும். பயணங்களுக்கும் சந்திரன் காரகத்துவம் கொண்டவர் என்பதால் வெளிநாட்டு பயணங்களுக்கான முயற்சிகளில் இருக்கின்ற தடைகள் நீங்கும்.

Tags : Chandra ,
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு