×
Saravana Stores

குரங்கு பெடல் விமர்சனம்

1985களில் கதை நடக்கிறது. நெசவுத்தொழிலாளி காளி வெங்கட்டுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது. எனவே, ஊர் மக்கள் அவரை ‘நடராஜா சர்வீஸ்’ என்று கேலி செய்கின்றனர். இதனால் அவரது மகன் சந்தோஷ் வேல்முருகன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். கோடையில் பள்ளி மாணவர்களுக்கு லீவு விடுகின்றனர். உடனே சந்தோஷ் வேல்முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, வாடகைக்கு சைக்கிள் எடுத்து கற்றுக்கொள்ள விரும்புகிறான். இதற்கு காளி வெங்கட் முட்டுக்கட்டை போட, அவருக்கு தெரியாமல் மிலிட்டரி மேன் பிரசன்னா பாலசந்திரனின் கடையில் இருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொள்கிறான். சைக்கிளுக்கு ஒரு மணி நேரத்துக்கு 50 பைசா வாடகை. ஒருநாள் சைக்கிளை குறித்த நேரத்தில் ஒப்படைக்க முடியாமல் அவதிப்படும் சந்தோஷ், கைவசம் போதிய காசு இல்லாததால், காளி வெங்கட்டிடம் சொல்லாமல் தனது அக்கா தக்‌ஷனாவின் வீட்டுக்கு செல்கிறான்.

அங்கும் காசு திரட்ட முடியவில்லை. வீட்டுக்கு திரும்பி வந்து, உண்டியலில் இருந்து காசு திருடும் சந்தோஷ் வேல்முருகன், 2 நாட்டுக்கோழி முட்டைகளை திருடி, சந்தையில் அதை எட்டணாவுக்கு விற்று, பிறகு சூதாட்டத்தில் எட்டணாவை வைத்து அதிக காசு சம்பாதிக்க ஆசைப்படுகிறான். இதில் தோல்வி அடையும் சந்தோஷ் வேல்முருகன், இறுதியில் என்ன செய்தான் என்பது மீதி கதை. சைக்கிள் என்பது, கிராமத்து மக்களின் விமானம். அதை திரையில் யதார்த்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொன்ன இயக்குனர் கமலக்கண்ணனுக்கு பாராட்டு. அதோடு, கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் பாராட்டு. கிராமத்து வெள்ளந்தி நெசவாளராகவே வாழ்ந்துள்ளார், காளி வெங்கட். ‘நடராஜா சர்வீஸ்’ என்று தன்னை கிண்டல் செய்வதை ஏற்க முடியாமல் தவிக்கும் அவர், மகனின் நியாயமான சைக்கிள் ஓட்டும் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிப்பது உருக்கம்.

அவரது மனைவி சாவித்திரியும், மகள் தக்‌ஷனாவும் யதார்த்தமாக நடித்துள்ளனர். வாடகை சைக்கிளுக்கு காசு தர முடியாமல் தவிக்கும் சிறுவன் சந்தோஷ் வேல்முருகன், அதே கடையில் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கடனை அடைப்பது நெகிழ வைக்கிறது. ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ், ரதீஷ், பிரசன்னா பாலசந்திரன், வாத்தியார் செல்லா, தோல்பாவை கூத்து குபேரன் ஆகியோர், அந்தந்த கேரக்டராகவே மாறி வாழ்ந்துள்ளனர். குடிகாரனாக வந்து லந்து செய்யும் ஜென்சன் திவாகரின் காமெடி படத்தை தாங்கி நிற்கிறது. எழுத்தாளர் ராசி.அழகப்பனின் ‘சைக்கிள்’ சிறுகதையை தழுவி, சிறுவர்கள் ஏங்கும் யதார்த்தமான ஒரு வாழ்க்கையை திரையில் அற்புதமாகச் செதுக்கியுள்ளார், இயக்குனர் கமலக்கண்ணன்.

சுமீ பாஸ்கரனின் கேமரா கிராமத்து அழகையும், வெள்ளந்தி மனிதர்களையும் இயல்பாகப் பதிவு செய்துள்ளது. ஜிப்ரான் வைபோதாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் நகர்வுக்கு உதவியுள்ளன. சிறுவர்களுக்கான இப்படத்தை பெரியவர்களும் பார்த்து, தங்களின் சைக்கிள் சவாரி பிளாஷ்பேக்கில் மூழ்கலாம்.

The post குரங்கு பெடல் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kali Venkat ,Nataraja Service ,Santhosh Velmurugan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED லப்பர் பந்து வெற்றிக்கு என்ன காரணம்? ஹரீஷ் கல்யாண்