×

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சிலைகளில் 3 சிலைகள் அந்தந்த கோவில்களில் ஒப்படைப்பு.! பக்தர்கள் நெகிழ்ச்சி

சென்னை: வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சிலைகளில் 3 சிலைகள் அந்தந்த கோவில்களில் ஒப்படைக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பிறகு, திருட்டுப்போன சிலைகள் ஆலயங்களுக்கு வந்ததையடுத்து வெடி வெடித்து, மலர்தூவி வரவேற்று பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்தது. இதில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலுார், தென்காசி என பல்வேறு கோவில்களில் இருந்து 8 உலோக சாமி சிலைகள், 2 கற் சிலைகள் என 10 சிலைகள், டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. இதனையடுத்து இந்த சிலைகளைகடந்த ஜூன் 1ஆம் தேதி,  தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 6ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.  அப்போது சிலைகளுடன் தொடர்புடைய கோவில் அதிகாரிகள், சிலைகளை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக்கோரி மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி சண்முகப்பரியா, முதற்கட்டமாக  தஞ்சாவூர் அருகே புன்னைநல்லுாரில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான நடராஜர் சிலை, தஞ்சாவூர் மாவட்டம் தீபாம்பாள்புரத்தில் உள்ள வான்மீகிநாதர் கோவிலுக்கு சொந்தமான சிவன் – பார்வதி சிலை, நாகப்பட்டினம் சாயாவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான குழந்தை சம்பந்தர் சிலை ஆகிய 3 சிலைகளை, அந்தந்த கோவில்களின் நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெய்ந்த்முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக தஞ்சாவூர் அடுத்த புன்னைநல்லூர் கைலாசநாதர் ஆலயத்திற்கு வந்த மூன்று சிலைகளுக்கும் பொதுமக்கள் வெடி வெடித்து, மலர்தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு திருட்டுப்போன சிலைகள் கோயில்களுக்கு வந்தது தங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி எனவும், இதனை மீட்ட காவல்துறையினருக்கு நன்றியும் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் இயக்குனர் முரளி ஜெயந்த், இந்த சிலைகளை மீட்டது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் எனவும், இந்த ஆண்டில் மட்டும் 10 சிலைகள் கொண்டு வந்துள்ளோம். தமிழ்நாடு வரலாற்றில் 10 சிலைகள் கொண்டு வந்தது இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 22 சிலைகள் மட்டும் மீட்டுள்ளோம். ஆனால் இந்த வருஷம் 10 சிலைகளைக் கொண்டு வந்துள்ளோம். இது ஒரு பெரிய சாதனை. இன்று மூன்று சிலைகளை ஒப்படைத்துள்ளோம்,. நாளை அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிலைகள் ஒப்படைக்க உள்ளோம். குழந்தை சம்பந்தர் சிலை மட்டும் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்று தெரியவில்லை, எனவே அதை சிலைகள் பாதுகாப்பாக மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்….

The post வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சிலைகளில் 3 சிலைகள் அந்தந்த கோவில்களில் ஒப்படைப்பு.! பக்தர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து