×

சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: கலப்படம் கண்டுபிடிக்க ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

சென்னை: சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மேலும் கலப்படத்தை தடுப்பது குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்கப்பட்டது. சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சென்னை எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், தனியார் கேன்டீனில் நேற்று திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து, உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஓட்டல் ஊழியர்களுக்கு உணவு கலப்படம், சந்தைகளில் இருந்து கொண்டுவரும் பொருட்களில் எப்படி கலப்படத்தை கண்டு பிடிப்பது என்பது குறித்து அதிகாரிகள் செயல்விளக்கம் அளித்தனர். பயன்படுத்தப்பட்ட எண்ணெய் அரசின் வழிகாட்டு நடைமுறைகளின்படி பயோ டீசல் பயன்பாட்டுக்கு அளிக்கும் நடைமுறை குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உணவுகள் செயற்கை நிறம் சேர்ப்பது மிகவும் தவறு. இதுகுறித்தும், கலப்பட பொருட்களை கண்டறிவது குறித்தும் ஆலோசனை வழங்கியிருக்கிறோம். அதே வேளையில்  உணவு பொருட்களை வீணாக்காதீர்கள் என்று  பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். உணவில் தரம் இல்லாமல் இருந்தாலோ அல்லது கலப்பட பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்களை 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய உணவு பாதுகாப்பு-தர நிர்ணய ஆணையம் நடத்திய 2021-22ம் ஆண்டுக்கான செயல்பாட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தேர்வாகி இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, சேலம், கோவை, நெல்லை, ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை பெற்றுள்ளன’’ என்றனர்….

The post சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: கலப்படம் கண்டுபிடிக்க ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : International Food Safety Day ,Chennai ,Food Safety Department ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...