திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய பெய்தது. அதனால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.திருவண்ணாமலை மாவட்டத்தில், அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு ஆறுதலாக நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்தது. இரவு 8 மணிக்கு தொடங்கி, அதிகாலை வரை நீடித்தது. மாவட்டத்தில், அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 73 மிமீ மழை பதிவானது.மேலும், செங்கத்தில் 12.80 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 29.20 மிமீ, தண்டராம்பட்டில் 39.80 மிமீ, கலசபாக்கத்தில் 5 மிமீ, போளூரில் 2.60 மிமீ, சேத்துப்பட்டில் 4 மிமீ, ஜமுனாமரத்தூரில் 40 மிமீ மழை பதிவானது.அதனால், திருவண்ணாமலை நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. எஸ்பி அலுவலகம் அருகே அமைந்துள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழை வெள்ளம் குளம்போல தேங்கியதால், அந்த வழியாக கடந்துசெல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்தனர்.மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 6 குடிசை வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதுமில்லை. மேலும், திருவண்ணாமலை அருகே மாட்டு கொட்டகை இடிந்து விழுந்ததில் பசுமாடு ஒன்று பலியானது. அதேபோல், திருவண்ணாமலை- வேலூர் சாலையில் 3 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.போளூர் பகுதியில் 4 இடங்களில் மரங்கள் முறிந்தன. அவற்றை, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அகற்றி, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர்.வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால், சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், கோடை வெயிலின் தாக்கம் தணிந்திருப்பதால், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்தும், அணைகளின் நீர்மட்டத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில், தற்போது 87.60 அடியாகவும், கொள்ளளவு 2198 மி.கன அடியாகவும் உள்ளது. அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 38.38 அடியாகவும், கொள்ளவு 270 மி.கன அடியாகவும் மிருகண்டா அணையின நீர்மட்டம் 17.22 அடியாகவும், கொள்ளளவு 56.64 மி.கன அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 41.33 அடியாகவும், 111.902 மி.கன அடியாகவும் உள்ளது….
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான கனமழை மரங்கள் முறிந்தன: குடிசை வீடுகள் சேதம் appeared first on Dinakaran.
