×

இதுவரை எந்த அரசும் உருவாக்காத புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகளை கைதூக்கி விட வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: இதுவரை எந்த அரசும்  உருவாக்காத புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை கைதூக்கி விடும் துறையாக இந்த துறை செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து, தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக “அனைத்தும் சாத்தியம்” என்ற பெயரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார்.தொடர்ந்து, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக ரூ.9.50 கோடி மதிப்பில் 7,219 பேர் பயன்பெறும் வகையில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் ஆகிய 5 வகையான உபகரணங்களில், 36 மாதிரிகளை பயனாளிகள் விருப்ப தேர்வு முறைக்கு அறிமுகப்படுத்தி, 6 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எத்தனையோ துறைகள் இருந்தாலும், நான் என் கையில் வைத்திருக்கக்கூடிய  துறை இந்த மாற்றுத்திறனாளிகள் துறை. கலைஞர் மாற்றுத்திறனாளிகள் மீது நீங்காத பற்றும், பாசமும் கொண்டவர். உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லே, அவர்களை நோகடிக்கும் சொல்லாக இருந்த காரணத்தால் தான், அதனை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் என்ற தன்னம்பிக்கை சொல்லை உருவாக்கி கொடுத்தவர் கலைஞர். இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனி துறையை உருவாக்கினார். உருவாக்கினது மட்டுமல்ல, தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்து பல்வேறு திட்டங்களை அதற்காக உருவாக்கி தந்திருக்கிறார். அரசினுடைய ரிக்கார்டுகளில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமன்றி, பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுதான் இந்த அரசு. இதனுடைய தொடர்ச்சியாக இந்த ஓராண்டு காலத்தில், * உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்த காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்க ரூ. 62 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* 70 கோடியே 76 லட்சம் ரூபாயில்,  37,660 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. * 1,228 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.* மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமன்றி, உலகிலேயே முன்மாதிரி திட்டமாக ரூ.1,709 கோடி செலவில் “உரிமைகள்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. * அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங்களுக்கு பார்வை குறைவுடைய 31 பேர் சிறப்பு நேர்வாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.இப்படி ஓராண்டில், மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பான சேவை வழங்கியமைக்காக, தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, குடியரசு தலைவரால்,சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான 3.12.2021 அன்று தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளி  துறை நம்பிக்கையும் கொடுத்தோம் என்று சொல்லும் அந்த அளவுக்கு செயல்படுத்த வேண்டும். துறையை நோக்கி வருபவர்கள் சிலர்தான். அந்த சிலரது கோரிக்கைகளை செவி மடுத்து கேட்க வேண்டும். உடனடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், சில வாரங்களுக்குள்ளாவது நிறைவேற்றி தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான். அந்த நம்பிக்கையை துறை அதிகாரிகளும், அலுவலர்களும் தான் காப்பாற்ற வேண்டும். UDID அட்டைகள் வழங்குவதில் கொஞ்சம் சுணக்கம் தெரிகிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக நல வாரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான ஆலோசனை வாரியம் போன்றவற்றின் கூட்டங்களை அடிக்கடி நடத்தி, மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை இதுவரை எந்த அரசும் உருவாக்காத அத்தியாயத்தை உருவாக்க வேண்டும். ஏனென்றால், மாற்றுத்திறனாளிகளை கைதூக்கி விடும் துறையாக இந்த துறை செயல்பட வேண்டும். அனைத்து துறை வளர்ச்சி – அனைத்து மக்களின் வளர்ச்சி – என்ற திராவிட மாடலுக்குள் இதுபோன்ற விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சியும், மகிழ்ச்சியும்தான் அடங்கி இருக்கிறது. அவர்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களது மகிழ்ச்சியில் தான் என்னுடைய மகிழ்ச்சி, இந்த அரசாங்கத்தினுடைய மகிழ்ச்சி இருக்கிறது என்றார். நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா  ஜீவன், தலைமை செயலாளர் இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர்  லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post இதுவரை எந்த அரசும் உருவாக்காத புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகளை கைதூக்கி விட வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CM. G.K. Stalin ,Chennai ,CM B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்