×

மிரட்டலுக்கு பணிந்தது அதிமுக பற்றி இனி பேசக்கூடாது: இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜ திடீர் உத்தரவு

சென்னை: அதிமுக-பாஜவில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்ததால் கட்சிக்குள் நாளுக்குநாள் மோதல் முற்றி வந்தது. இதனால், ‘பாஜவுடன் கூட்டணி தேவையில்லை. தமிழகத்தில் தனித்தே செயல்படலாம்’ என அதிமுக முன்னணி தலைவர்கள் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர். எனவே, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனி அதிமுக பற்றி பேசக்கூடாது என இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்ளிட்ட பாஜவினருக்கு மாநில தலைவர் அண்ணாமலை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக, பாஜ கூட்டணி உருவானது. எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமான உறவினர்கள், பினாமிகள், கான்ட்ராக்டர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன. ஆனால், அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் மட்டும் சோதனை நடத்தப்படவில்லை. அதேநேரத்தில் உச்சகட்டமாக தலைமை செயலகத்திலேயே சிபிஐ சோதனை நடந்தது. இதனால், அதிமுக தலைவர்கள் பாஜவுக்கு ஆதரவு தருவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். பல அமைச்சர்கள் மீது பாஜ தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினாலும், அதை கண்டுகொள்ளாமல் இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணியை தொடர்ந்தனர். கடந்த மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. அதேபோல, சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக, பாஜ கூட்டணி தோல்வியை சந்தித்தது. தோல்விக்கு காரணம் நீங்கள்தான் என இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். மேலும், திமுக அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தவறான குற்றச்சாட்டுகளை கூறினர். சில நேரங்களில் அதிமுகவையும் தாக்கத் தொடங்கினர். இதனால் பாஜ மீது அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். அதேநேரத்தில் கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவினரை பாஜ தனது கட்சிக்கு இழுத்தது.இந்நிலையில், முன்னாள் நிதி அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான பொன்னையன், ‘‘தமிழகத்தில் பாஜதான் எதிர்க்கட்சி போல பிம்பம் காட்டுகிறது. இதனால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும். இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது. பாஜ வளர்வது ஆபத்து. தமிழக மக்கள் பிரச்னைகளுக்காக அதிமுக பாஜவை எதிர்த்து போராட வேண்டும்’’ என்று கடுமையாக சாடினார். இதற்கு பாஜ மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொன்னையனை கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வி.பி.துரைசாமி போன்றவர்கள் அதிமுகவை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. அவர் செல்லாத கட்சியே இல்லை. அவர் குறை சொல்லக்கூடாது என்று பதிலடி கொடுத்தார்.மேலும், மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கட்சி வளர்ச்சிக்காக பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ளக் கூடாது. பாஜ துணைத்தலைவர் வி.பி.துரைசாமியெல்லாம் அதிமுக குறித்து பேசுவது வேடிக்கையானது. பதவிக்காக அண்ணாமலை அரசியல் செய்கிறார்’ என்று பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். உடனே, பாஜ செயலாளர் கரு.நாகராஜன் பதிலடி கொடுத்தார். இப்படி தொடர்ந்து அதிமுக, பாஜ இரண்டாம் கட்ட தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினர். இது, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக-பாஜ பிரச்னை பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து, அதிமுக பற்றி விமர்சிக்க தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திடீர் தடை போட்டுள்ளார்.  இதுதொடர்பாக, அவர் நேற்று சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி: அதிமுகவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி தேசிய அளவிலான பிரச்னைகளில் அவர்கள் எங்களோடு நிற்பவர்கள். பொன்னையன் தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து, அதிமுகவின் கருத்து என்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தெரிவிப்பதுதான். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பாஜ கைப்பற்றி 3வது முறையாக மோடி பிரதமர் ஆவார். அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் அதிமுகவை அழித்து பாஜ வளர வேண்டிய அவசியமில்லை. இனிமேல் அதிமுக தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.பாமக தலைவர் அன்புமணி மேகதாது அணை விவகாரத்தில் பாஜ தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். மேகதாது அணை கட்டக்கூடாது என்று தஞ்சாவூரில் பாஜ மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அப்போது அன்புமணி எங்கே போனார். கருத்து எதுவும் சொல்லவில்லை. மேகதாது அணை கட்டியே தீர வேண்டும் என்று கர்நாடகத்தில் காங்கிரசார் பேரணி நடத்தினார்கள். அப்போது இங்குள்ள காங்கிரசார் கண்டிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் இந்த திடீர் உத்தரவால் அதிமுக, பாஜவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே கடந்த சில நாட்களாக நடந்து வந்த மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.* பொன்னையன் தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து.* அதிமுகவின் கருத்து என்பது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்  தெரிவிப்பதுதான்.* இனிமேல் அதிமுக தொடர்பாக தனிப்பட்ட கருத்தை யாரும் கூறக்கூடாது என்று பாஜவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்….

The post மிரட்டலுக்கு பணிந்தது அதிமுக பற்றி இனி பேசக்கூடாது: இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜ திடீர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tamil Nadu BJP ,-phase ,CHENNAI ,BJP ,Bajwa ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...