×

நாங்குநேரி அருகே காஸ் டேங்கர் லாரி பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்தது

நாங்குநேரி : நாங்குநேரி அருகே தறிகெட்டு ஓடிய லாரி சிறுவளஞ்சி நம்பியாற்றுப்பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். பாரத் காஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி, கேரள மாநிலம், கொச்சியில் இருந்து காஸ் ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 4 மணியளவில் நாங்குநேரி அருகே சிறுவளஞ்சி நம்பியாற்று பாலம் அருகே வந்தபோது டிரைவர் பாலகிருஷ்ணன் சற்று தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவரது கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடிய காஸ் டேங்கர் லாரி, நம்பி ஆற்றுப்பாலத்தில் மோதியதோடு தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு சுமார் 30 அடி பள்ளத்தில் ஆற்றுக்குள் தலைகுப்புற பாய்ந்து கழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவரான பாலகிருஷ்ணன் கண்ணிமைக்கும் வேளையில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்து விரைந்து வந்த நாங்குநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் லாரியில் முழு கொள்ளளவு எரிவாயு இருப்பதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 18 டன் எடை கொண்ட சிலிண்டரை விட்டு வெளியில் எடுக்கும் முயற்சியில் எண்ணெய் நிறுவனம் மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர்.மாற்று ஓட்டுநர் இல்லாததால் அடிக்கடி விபத்துதேசிய நெடுஞ்சாலையில்  பயணிக்கும் லாரிகளில் மாற்று ஓட்டுநர் மற்றும் உதவியாளர் எடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. லாரி உரிமையாளர்கள்  டீசல் விலை உயர்வு, அதிக டோல்கேட் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு அதிகரிக்கும் செலவுகளை தவிர்ப்பதற்காக குறைந்த அளவு பணியாளர்களை ஈடுபடுத்துவதாகவும் அதனால் ஏற்படும் பணிச்சுமை காரணமாக சாலைகளில் இது போன்ற விபத்துகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  இதனை சம்பந்தப்பட்டவர்கள் கண்காணித்து விபத்து நடக்கா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது….

The post நாங்குநேரி அருகே காஸ் டேங்கர் லாரி பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Nangkuneri ,Cass Tanker ,Nanganeri ,Dinakaran ,
× RELATED மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன்...