×

ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்பி, குழப்பத்தை  ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு  2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி  முதல் பங்களிப்பு  ஓய்வூதியத் திட்டம் அன்றைய அதிமுக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.   இத்திட்டத்தில் 6,02,377 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இத்திட்டத்தின்படி, பணியாளர்களின் ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகை பணியாளரின் பங்குத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.  இத்தொகைக்கு நிகரானத் தொகை அரசின் பங்களிப்பாக பணியாளர் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.  இத்தொகைக்கு உரிய வட்டியை அரசு தொடர்ந்து செலுத்தி வருகிறது.அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் வைப்புத்தொகை 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியில் ரூ.53,555.75 கோடியாக உள்ளது.  இத்தொகையில் ரூ.41,264.63 கோடி, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பணத்திரட்சியுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்திலும், ரூ.12,000 கோடி பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் ஒன்றிய அரசின் கருவூல பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை அரசு முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது. எனவே, இதை வேறு எந்த பணிக்கோ, நோக்கத்திற்கோ இதுவரை பயன்படுத்தவில்லை. இனிவரும் காலங்களிலும் இந்நிதி ஓய்வூதியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.  இது குறித்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே கொள்கை விளக்கக் குறிப்பின்மூலம் மாநில சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வைக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள மாதாந்திர கூட்டுத் தொகைக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் வட்டித் தொகை கணக்கிடப்படுகிறது. தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும்.  இவ்வட்டி தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. உண்மைநிலை இவ்வாறு இருக்க, இத்தகைய செய்திகள், அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். …

The post ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister Pranivel Thiagarajan ,Chennai ,PTI ,Government ,Minister ,Pranivel Thyagarajan ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...