×

‘அமீகோ கேரேஜ்’ வி ம ர் ச ன ம்

12ம் வகுப்பு இயற்பியல் ஆசிரியர் சிரிக்கோ உதயா தன்னையும், நண்பர்களையும் அடித்ததால் கோபப்படும் மாஸ்டர் மகேந்திரன், சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்கும் ‘அமீகோ கேரேஜ்’ ஜி.எம்.சுந்தரிடம் உதவி கேட்க, அவரோ ஆசிரியரை முட்டி போட வைத்து மிரட்டி அனுப்புகிறார். ஜி.எம்.சுந்தருடன் பழகும் மாஸ்டர் மகேந்திரன் கோஷ்டி, பிறகு நெருங்கிய நண்பர்களாகின்றனர். இந்நிலையில், ஒயின் ஷாப்பில் மிகப்பெரிய ரவுடி முரளிதரன் சந்திரனின் அடியாள் தாசரதி நரசிம்மனுடன் மாஸ்டர் மகேந்திரனுக்கு திடீர் மோதல் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளே மீதி கதை. சந்தர்ப்ப சூழ்நிலை ஒரு ரவுடியை எப்படி உருவாக்குகிறது என்பதை படம் முழுக்க சொல்லிவிட்டு, கடைசியில், அதை தவிர்த்திருக்க முடியும் என்று பாடம் நடத்தியிருக்கிறார், புது இயக்குனர் பிரசாந்த் நாகராஜன்.

தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், முழுநீள ஆக்‌ஷன் ஹீரோவாக முயற்சித்துள்ளார். அதற்காக சண்டைக் காட்சிகளில் வில்லன்களை துவம்சம் செய்துள்ளார். ஆதிரா ராஜ் அவர் மீது காதல் கொள்வது வழக்கமான ஒன்று. ஆதிரா ராஜ் அம்சமாக இருந்தாலும், சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஜி.எம்.சுந்தர் தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். முரளிதரன் சந்திரன், தாசரதி நரசிம்மன், தீபா பாலு உள்பட பலர் தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர். விஜயகுமார் சோலைமுத்துவின் கேமரா, காட்சிகளை சிந்தாமல் சிதறாமல் ஒளிப்பதிவு செய்துள்ளது.

ஆர்ட் டைரக்டர் மன் பாலாஜியின் கைவண்ணத்தில் ‘அமீகோ கேரேஜ்’ அரங்கு ஈர்க்கிறது. பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளார். பெற்றோரின் பேச்சை மீறிய மகன் திடீர் ரவுடியாக மாறுவதும், வளர்ந்த பிள்ளைக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து அறிவுறுத்தாமல் விட்டுவிட்டோமே என்று பெற்றோர் கலங்குவதும் பிரசாந்த் நாகராஜன் சொல்ல வந்த நீதி. அதை அழுத்தமான காட்சிகளால் சொல்லத் தவறிவிட்டார்.

The post ‘அமீகோ கேரேஜ்’ வி ம ர் ச ன ம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sanam ,Master Mahendran ,Siriko Udaya ,'Amico Garage ,GM ,Sundar ,Master ,Mar Sanam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நான் என்றைக்குமே உங்கள் வீட்டுப்...