×

சிங்கப்பெண்ணே விமர்சனம்…

முன்னணி நீச்சல் வீராங்கனையாக முயற்சிக்கிறார், ஷில்பா மஞ்சுநாத். சில காரணங்களால் அது நடக்காததால், சென்னையில் நீச்சல் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். ஒருநாள் தனது பெற்றோரைச் சந்திக்க தென்காசி வருகிறார். அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் ஆர்த்தி நீச்சலடிப்பது, வேகமாக சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது என்று, டிரையத்லான் வீராங்கனையாக இருக்கிறார். பெற்றோரை இழந்த ஆர்த்திக்கு ஆதரவுக்கரம் நீட்டிய பாட்டி திடீரென்று மரணம் அடைகிறார்.

அவரது வேண்டுகோளின்படி ஆர்த்தியை சென்னைக்கு அழைத்து வரும் ஷில்பா மஞ்சுநாத், அவருக்கு நீச்சலடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஓட்டப்பந்தயம் போன்ற கடினமான பயிற்சிகளை அளித்து, அவரை முன்னணி விளையாட்டு வீராங்கனையாக்க முயற்சிக்கிறார். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் பிரேம் குமாரின் மகளை விட வேகமாக ஓடுவது மட்டுமின்றி, தேசிய அளவிலான சாதனை நேரத்தையும் ஆர்த்தி எளிதில் கடந்துவிடுகிறார்.

இதனால் கோபத்துக்குள்ளான பிரேம் குமார், சூழ்ச்சிகளின் மூலம் ஆர்த்தியைப் போட்டியில் பங்கேற்கவிடாமல் தடுக்கிறார். அவரை எதிர்க்கும் ஷில்பா மஞ்சுநாத், இறுதியில் ஆர்த்தியை ஜெயிக்க வைத்தாரா என்பது கதை. கதையின் நாயகியாக, டிரையத்லான் விளையாட்டில் தேசிய அளவில் வென்ற வீராங்கனை ஆர்த்தி நடித்துள்ளதால், ஒவ்வொரு பயிற்சியிலும், போட்டியிலும் நம்பகத்தன்மை ஏற்படுகிறது. இயல்பான முகமும், நடிப்பும் அவரது கேரக்டருக்கு வலு சேர்த்துள்ளன.

பயிற்சியாளராக வரும் ஷில்பா மஞ்சுநாத் தோற்றத்திலும், நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். நீச்சல் உடையில் கச்சிதமாக இருக்கிறார். அவரும் நிஜ விளையாட்டு வீராங்கனை என்பதால், பயிற்சி அளிக்கும் காட்சிகளிலும், கலெக்டரின் சூழ்ச்சிக்கு அடிபணியாத துணிச்சலிலும் கம்பீரம் காட்டியுள்ளார். பிரேம் குமார், ஆர்த்தியின் வெற்றியை தடுக்கும் பயிற்சியாளர் தீபக் நம்பியார் (இவர், மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் பேரன்), ஷில்பா மஞ்சுநாத்தின் தந்தையாக வரும் ஏ.வெங்கடேஷ், ஆர்த்தியின் முறைமாமனாக வந்து அலப்பறை செய்யும் சென்ராயன் ஆகியோர், நடிப்பில் கவனிக்க வைத்துள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகளை விதிகளின்படி இயக்கியுள்ள ஜேஎஸ்பி சதீஷை பாராட்டலாம். ஆனால், சினிமா பாணி திரைக்கதையில் திருப்பங்கள் இல்லாததால், சற்று சோர்வு ஏற்படுகிறது. டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணியின் பின்னணி இசை, கதையின் நகர்வுக்கு உதவியுள்ளது. என்.கே.ஏகாம்பரத்தின் கேமரா, தேசிய அளவிலான டிரையத்லான் போட்டியை படமாக்கிய விதம் சிறப்பாக இருக்கிறது. சாதிக்க முயற்சிக்கும் வீராங்கனைகள், படமாக இல்லாமல், ஒரு பாடமாக நினைத்து பார்க்கலாம்.

The post சிங்கப்பெண்ணே விமர்சனம்… appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shilpa Manjunath ,Chennai ,Tenkasi ,Aarti ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...