சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு எதிராக, அமெரிக்க கோர்ட்டில் துணிச்சலுடன் வாதாட முன்வரும் பெண் வழக்கறிஞர் ராஹேவுக்கு அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுக்கிறது. தற்செயலாக அவரை சென்னையில் சந்திக்கும் ஹீரோ வருண், பிறகு அவருடன் நட்பு கொண்டு, காதல் கொண்டு, தன்னுயிரை துச்சமென்று நினைத்து ராஹேவை காப்பாற்றுகிறாரா, இல்லையா என்பது படத்தின் கதை.
கான்ட்ராக்ட் கில்லர் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார், வருண். காதலி ராஹேவிடம் தன்னைப் பற்றிய உண்மைகளை சொன்ன பிறகு, தன்னுடனான காதலை முறித்துக்கொண்டு வெளிநாடு செல்லும் அவரைப் பிரிய மனமின்றி தவிக்கும் காட்சியில் நன்கு நடித்துள்ளார். அவரது தோற்றம் ஆக்ஷன் காட்சிகளுக்கு நன்கு ஒத்துழைத்துள்ளது. ரொமான்ஸ் காட்சிகளில் இன்னும் பயிற்சி பெற வேண்டும். சற்று முதிர்ச்சியான முகம் கொண்ட ராஹே, படம் முழுக்க ஒரேமாதிரியான பாவனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர், நடிகர் ஆரவ் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபல மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோ கிருஷ்ணா திடீரென்று வில்லனாகி, கூலிப்படை ஆளாகி, வருண் தனது பழைய நண்பன் என்று தெரிந்ததும் உருகி வழிகிறார். சில காட்சிகளில் துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராஹேவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் வருணுக்கு பல ரகசிய தகவல்களை கடத்தும் கேரக்டரில் திவ்யதர்ஷினி நடித்துள்ளார். ராஹேவின் தந்தையாக வரும் கிட்டி, தன் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்.
படம் முழுக்க லோக்கல் ஆட்களும், ஃபாரின் நபர்களும் நிரம்பி இருக்கிறார்களே தவிர, காக்கிச்சட்டை போலீஸ் ஒரு காட்சியில் கூட வரவில்லை. கவுதம் மேனன் இயக்கியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை தனது விறுவிறுப்பான ஒளிப்பதிவின் மூலம் ஆடியன்சுக்கு கடத்துகிறார் எஸ்.ஆர்.கதிர். ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் யானிக் பென் வடிவமைத்திருக்கும் சண்டைக் காட்சிகள் அசத்தலாக இருக்கின்றன. கார்த்திக் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. தவிர பின்னணி இசையிலும் பேரிரைச்சலையே வெளிப்படுத்தியுள்ளார்.
The post ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.