×

வலங்கைமான் பகுதிகளில் நெல் வயல்களில் நாற்றங்காலை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகள்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த வீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நாற்றங்காலில் நள்ளிரவு புகுந்து நாசப்படுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது மின் மோட்டார் மூலம் குறுவை சாகுபடி செய்வதற்காக விதைவிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீரமங்கலம், வேலங்குடி, ஊத்துக்காடு, சாலபோகம், படப்பக்குடி, வீராணம், மணலூர் உள்ளிட்ட வெட்டாறு கரையோரம் உள்ள கிராமங்களில் விவசாயிகள் கை நடவு இயந்திரம் நடவு முறைகளில் நெல் நடவு செய்ய விதை விடும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே இப்பகுதிகளில் விடப்பட்டுள்ள நாற்றங்காலில் இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகள் நாசப்படுத்தி விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த காட்டு பன்றிகள் நாற்றாங்கால்களை மட்டுமல்லாமல், நடவு செய்த வயல்களையும் நாசப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். காட்டுப் பன்றிகளின் தொல்லையினால் வீரமங்கலம் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் என்ற விவசாயி ரூ. 7,500 செலவு செய்து ஐந்து சிப்பங்கள் விதை விடப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காட்டுப்பன்றிகள் நாற்றங்காலை துவம்சம் செய்து வைத்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் புதிதாக விதை விடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார நஷ்டம் மட்டும் கால விரயத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். அதேபோன்று அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகளான சங்கர், முகம்மது சேட்டு, சுப்ரமணியன், சீனிவாசன், பாஸ்கர், இளையராஜா உள்ளிட்ட பல விவசாயிகளின் வயல்களிலும் காட்டுப்பன்றிகள் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து வீரமங்கலம் விவசாயி சண்முகசுந்தரம் கூறுகையில், இப்பகுதியில் உள்ள வெட்டாறு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால் ஆற்றில் நாணல் மற்றும் புதர்கள் மண்டி கிடக்கின்றது. அங்கு தங்களது வாழ்விடமாக மாற்றிக்கொண்ட காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது என்றார். இதனிடையே மருவத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி பயிருக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சும்போது எல்லாம் காட்டு பன்றிகள் இரவில் வயலில் புகுந்து பருத்தி பயிர்களை நாசம் செய்து வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காலதாமதம் செய்யாமல் மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்கள் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.காவலுக்கு ஆள் இருந்தும் கட்டுப்படுத்த முடியவில்லைவயலில் மனித உருவங்கள் போல வெள்ளை சாக்கு துணியில் உருவங்கள் அமைத்தல், இரவு முழுவதும் விளக்குகளை எரியவிடுதல், இரவில் காவலுக்கு ஆட்களை நியமித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டாலும் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.போதிய உணவு கிடைக்காததால் விளைநிலங்களில் படையெடுப்புகோடைக்காலத்தில் கிழங்கு வேர், புல்பூண்டு, முட்டை, பழங்கள் என உண்ணும் பன்றிகள் தற்போது போதிய உணவு கிடைக்காததால் விளைநிலங்களை நோக்கி படையெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது….

The post வலங்கைமான் பகுதிகளில் நெல் வயல்களில் நாற்றங்காலை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகள்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Valankaiman ,Valangkaiman ,Veeramangalam ,Valankhaiman ,Dinakaran ,
× RELATED ஆர்.கே.பேட்டை அருகே ரூ.5.50 கோடியில் உயர்மட்ட மேம்பால பணி: எம்.எல்.ஏ ஆய்வு