×

மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டிய துறைமுகம்-மதுரவாயல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மீண்டும் அடிக்கல் நாட்டியிருப்பது வியப்பு: ஒன்றிய பாஜ அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் நான்கு வழி இரண்டடுக்கு சாலையின் செயல்திட்ட மதிப்பு ₹5852 கோடி செலவில் 21 கி.மீ. நீளமுள்ள சாலை அமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறார். இதே திட்டம் ₹1655 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே அமைத்திட அன்றைய முதல்வர் கலைஞர் முன்னிலையில், அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கால் 8.1.2009 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.   மொத்த திட்ட மதிப்பான ₹1655 கோடியில் ₹700 கோடி செலவு செய்து 30 சதவிகித பணிகள் முடிந்த நிலையில், 2011ல் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா பொருந்தாத, நியாயமற்ற காரணங்களைக் கூறி திட்டத்தை முடக்கியதை எவரும் மறந்திட இயலாது. அன்று ₹1655 கோடியில் நிறைவு பெற வேண்டிய திட்டத்திற்கு இன்று ₹5852 கோடி செலவில் பிரதமர் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.  ஏற்கனவே மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது மிகுந்த வியப்பையும், வேதனையையும் தருகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்களும், அடிக்கல் நாட்டிய திட்டங்களும் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பரிசீலனையில் இருந்து தொடக்க வேலைகள் நடைபெற்று வந்தவையாகும். அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்தெந்த திட்டங்களெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதோ, அந்த திட்டங்களையெல்லாம் முடக்குகிற நடவடிக்கைள் நடந்து வந்ததை எவரும் மறுக்க முடியாது.பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து உரையாற்றியது மிகுந்த பாராட்டுக்குரியது. பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களுக்கு தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பங்களிப்பு ஆற்றி வருவதை புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்தார்.   மாநில உரிமைகளை பறித்து ஒற்றை ஆட்சியை உருவாக்குவதற்கான முயற்சியில் பாஜ ஈடுபட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் நேரு வழங்கிய உறுதிமொழியையும், அதன்மூலம் வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பையும் பயன்படுத்தி தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்கள் மொழி உரிமைகளை பாதுகாக்க ஓரணியில் திரண்டு பாஜவின் மொழித் திணிப்பை முறியடிப்பார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டிய துறைமுகம்-மதுரவாயல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மீண்டும் அடிக்கல் நாட்டியிருப்பது வியப்பு: ஒன்றிய பாஜ அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Manmohansingh ,Modi ,KS Azlagiri ,Union BJP government ,Chennai ,Tamil Nadu Congress ,President ,KS Azhagiri ,Chennai port ,Maduravayal ,Dinakaran ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...