×

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி, முருகன், பயஸ் உள்பட 6 பேர் விடுதலையாவார்களா? சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர்  விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேர் கடந்த 31 ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலதாமப்படுத்தினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், பரோலில் இருந்த பேரறிவாளன், தனக்கு ஜாமீன் வழங்க கோரி தனி மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு கடந்த 18ம் தேதி  விடுதலை செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘இந்த வழக்கில் ஜனாதிபதிக்கு மட்டுமே முடிவு எடுக்கும் உரிமை உள்ளது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. இந்த வழக்கு மாநில அரசு தொடர்பானதால் மாநில அரசுக்கே முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் சுதந்திரத்தை வைத்து அமைச்சரவை எடுக்கும் முடிவை மதிக்காமல் இருப்பது சரியல்ல. பேரறிவாளன் ஆயுள்தண்டனை கைதி என்பதால், அவரின் விடுதலையில் ஆளுநர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அமைச்சரவையின் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியது தவறு. பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. அதனால் இந்த விவகாரத்தில் பேரறிவாளனின் சிறை நன்னடத்தை, அவரது உடல்நலம், மருத்துவ பரிசோதனை, இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்தது ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை நேரடியாக விடுதலை செய்கிறோம்’ என்று தீர்ப்பில் கூறப்பட்டது. விடுதலை செய்யப்பட்டதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களை பேரறிவாளன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி, முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 6 பேரை விடுதலை செய்வது குறித்து சட்ட வல்லுனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக ஊட்டி சென்றுள்ளார். அங்கு, மலர் கண்காட்சி மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆ.ராசா எம்பி, தலைமை செயலாளர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்பி மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்துதான் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடிப்படையாக வைத்துதான் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது விடுதலை ஆகியுள்ளார். இதே அடிப்படையில், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்த பிரச்னை தொடர்பாக தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது….

The post பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி, முருகன், பயஸ் உள்பட 6 பேர் விடுதலையாவார்களா? சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Nalini ,Murugan ,Payas ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Perarivalan ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்