×

மாவட்டத்தில் இலை காலியாவதால் டென்ஷனில் இருக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாஜி மந்திரிக்கு எதிராக இலையின் முக்கிய உறுப்பினர்கள் காய் நகர்த்தி வர்றாங்களாமே, ஏனாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அதியமான் கோட்டை மாவட்ட இலை கட்சிக்கு 2 மாவட்ட செயலாளர்களை நியமிக்கணும்ன்னு, எம்ஜிஆர் காலத்து மாஜி ஒருவர் வாய்ஸ் கொடுத்து இருந்தார். இதனால், தற்போது பொறுப்பில் இருக்கும் மாஜி செம கடுப்பில் இருந்தார். இந்த பழைய கதைக்கு மீண்டும் உயிர் கொடுத்து வர்றாங்களாம் இலையின் முக்கிய நிர்வாகிகள். இதில் எம்ஜிஆர் காலத்துக்கு மாஜிக்கு வாய்ஸ் பெருகிக்கிட்டே இருக்காம். தற்போதைய மாஜியால் பாதிக்கப்பட்டவர்கள்,  பல்லாண்டுகளாக கட்சியில் இருந்தும் முன்னேற்றம் காணாதவர்கள், மறைமுகமாக  மாஜிக்கு எதிராக காய் நகர்த்தும் பார்ட்டிகள் என்று ஒரு குழுவாக மாற ஆரம்பிச்சிருக்காங்களாம். இந்த நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இலையின் முக்கிய தலைகள் இடம் மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று கட்சிக்குள் பலமாக பேச்சு அடிபடுகிறது. இதனால் சிட்டிங் மாஜி, உச்ச கட்ட டென்ஷனில் இருக்காராம். இது குறித்து தனது அடிப்பொடிகளிடம், ‘மாவட்டத்தை இரண்டாக பிரிக்கணுமுன்னு இப்போது குரல் கொடுக்கிறீங்க. நாம ஆளுங்கட்சியாக இருந்தப்போ ஏன் இதை சொல்லலை. அப்படி சொல்லி இருந்தால் செய்து இருக்கலாம். அப்போது மவுனமாக இருந்துவிட்டு இப்போது குரல் கொடுத்தால் நடக்கவா போகிறது. எல்லாம் என்னை டென்ஷன் படுத்தவே இப்படி செய்யறாங்கனு அடிபொடிகளிடம் சொன்னாராம். இது செவி வழியாக எதிர்கோஷ்டியிடம் சென்றபோது, இவர் பவர்ல இருந்தபோது யாரை பார்த்தார்… யாருக்கு செய்து கொடுத்தார்… இவரை பார்க்கவே பல நாட்கள் தவம் இருக்க வேண்டி இருந்ததே… பவர் போன பிறகு புலம்புறதுல பலன் இல்லை என்று பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மயிலத்துல குக்கர் விற்பனையும் குறைந்து போச்சாம்… விசில் சத்தமும் கேட்கவில்லையாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மயிலம் மாவட்டத்தில் குக்கர் கட்சியின் மாவட்ட செயலாளராக முதல் எழுத்தில் ஆரம்பிக்கும் பாரியானவர் பெயரளவுக்குதான் உள்ளாராம். கட்சி நிர்வாகிகளையும் கண்டு கொள்ளாததால் குக்கர் கட்சி நாளுக்கு நாள் தேய் பிறையாகி வருகிறதாம். மயிலம் மாவட்டத்தில் குக்கர் கட்சியில் இருந்த சிலரும் வேறு கட்சிக்கு தாவிட்டாங்களாம். இது குறித்த தகவல் தலைமைக்கு சென்றும் தலைமை அதை கண்டுகொள்ளாமல் ‘கப்சிப்’ என்று இருக்கிறதாம். கட்சி ஆரம்பிச்ச காலத்தில் விசுவாசியான நிர்வாகிகள் மட்டும் தான் குக்கர் கட்சியில் இருந்தார்களாம். ஆனால், அவர்களும் மாவட்ட செயலாளர் மீதான கடும் அதிருப்தியில் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து வெளியேறி வருகிறார்களாம். இதில் இருக்கிற கொஞ்ச நிர்வாகிகளும் மாற்று கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளார்களாம். இதனால மயிலம் மாவட்டத்தில் விசில் சத்தமே கேட்கவில்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பாலியல் வழக்கில் சிக்கிய காக்கி அதிகாரி மீது பாசம் காட்டும் காக்கிகளை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சி ஆட்சியில் திருக்கோவிலூரில் பணிபுரிந்த ஆய்வாளர், திருட்டு வழக்கு சம்மந்தமாக விசாரணைக்கு சென்றபோது, பழங்குடி இருளர் பெண்களை பலாத்காரம் செய்ததாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாம். அண்மையில் கோர்ட்டுக்கு வந்த காக்கி அதிகாரியின் ஜாமீன் மறுக்கப்பட்டதால் நீதிமன்றத்திலிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்து விட்டாராம். இச்சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நீதிமன்ற ஊழியர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாராம். 5 நாட்களைக் கடந்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லையாம். காக்கி உயரதிகாரிகள் காட்டும் பாசத்தால் வழக்கில் பதிவாகாமல் தப்பித்து வருகிறாராம். இதேநிலை நீடித்தால், இந்த வழக்கு விசாரணையும் அவருக்கு சாதகமாக தான் அமையும் என்று பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தினர் வேதனையோடு பேசிக்கிறாங்க…’’என்றார் விக்கியானந்தா.‘‘நிழலை பார்த்து நிஜம் பயந்துபோன கதையை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டம் பட்டுநகர்ல ஆறு அணி ஒன்றியத்துல 75 ஊர் ஆட்சிகள் இருக்குது. இதுல கடந்த 2019-2022 ம் ஆண்டு வரை பிஎம் வீடு திட்டத்துல பயனாளிகளை தேர்வு செஞ்சிருக்காங்க. இதுல வெஸ்ட் ஆறு அணியில இருக்குற அத்திமலைப்பட்டு ஊர் ஆட்சியில 22 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்குது. இதில், வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்குறதுக்காக ஊர் ஆட்சி மன்றத்தோட தலைவரும், செயலாளரும் ஒரு பயனாளிகளுக்கு 30 ஆயிரம்னு ரேட் பிக்ஸ் செஞ்சி, கரன்சியை கரெக்ட் பண்ணியிருக்காங்க. முதல்கட்டமாக ரூ.6ஆயிரம் வாங்கியிருக்காங்க. மீதம் கரன்சி கிடைக்காததால 2 வருடங்களுக்கு மேலாகியும் பணி ஆணை வழங்கலையாம். இதில், பணி ஆணை வழங்க மீண்டும் கரன்சி கேட்டு பயனாளிகளை தொந்தரவு செஞ்சிருக்காங்க. இதுல யாரோ ஒருத்தர், அந்த ஊர் ஆட்சி செயலர் கிட்ட லஞ்சம் கொடுக்குற வீடியோவை ரெக்கார்டு செஞ்சி, சமூக வலைதளங்கள்ல பரப்பிவிட்டிருக்காரு. இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திடுச்சு. ஊராட்சி தலைவர் மேல நடவடிக்கை எடுத்தா மட்டும் போதுமா… அதிகாரிகள், தலைவர், துணை தலைவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவங்க மேலேயும் நடவடிக்கை எடுக்கணும்னு கேட்கிறாங்க… இதனால் விரைவில் இவர்கள் மேலும் நடவடிக்கைபாயும்னு பாதிக்கப்பட்ட மக்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.       …

The post மாவட்டத்தில் இலை காலியாவதால் டென்ஷனில் இருக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji ,minister ,Tenshan ,wiki ,Kai Move ,Enam ,Peter ,Adhiyaman ,Castle ,Maji Minister ,
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்