×

தானமாக சிறுநீரகம் பெற அனுமதி கோரிய வழக்கு அறுவை சிகிச்சை அங்கீகார குழு இன்றே முடிவு எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குன்னூரை சேர்ந்தவர் சஞ்சய் சைமன்,  சிறுநீரகம் பாதித்து அவதிப்பட்டு வந்துள்ளார். இவருக்கு கிரேஸி என்பவர்  சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார். அதற்கு உயர் நீதிமன்றமும் ஒப்புதல் அளித்த நிலையில் திடீரென கிரேஸியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால்  திட்டமிட்டபடி  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. தற்போது சஞ்சய் சைமனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள சூழலில், உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில்  குன்னூரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற  குடும்ப நண்பர், சிறுநீரக தானம் தர சம்மதித்த நிலையில், ரத்த பந்த உறவு இல்லை என்பதால்  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரக்குழு அனுமதியளிக்க மறுத்துள்ளது. இதையடுத்து,  இந்த தானத்தை ஏற்று  உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சைமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்  விசாரணைக்கு வந்த போது,  அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரக் குழு கூட்டம் இன்று (மே 20) நடைபெற உள்ளது.அதில் மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அந்த கூட்டத்தில் மனுதாரர் தரப்பினர் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அதை குழு ஆராய்ந்து உறுப்பு மாற்றுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுத்து (மே 20ம் தேதி) இன்று இரவு 7 மணிக்குள் மனுதாரர் தரப்புக்கு தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்….

The post தானமாக சிறுநீரகம் பெற அனுமதி கோரிய வழக்கு அறுவை சிகிச்சை அங்கீகார குழு இன்றே முடிவு எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Sanjay Simon ,Gunnur ,Surgical Accreditation Committee ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...